பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசன்

43


கல்வியறிவில்லாத வீடு இருண்ட வீடாகத்தான் இருக்கும். ஆதலின், அறிவென்னும் ஒளி விளக்கினை ஏற்றிவைத்தல் வேண்டுவது தமிழர் கடன் என அறிவுறுத்த வந்த கவிஞர் ஒரு குடும்பத்தைப் படைத்து அக் குடும்ப உறுப்பினர் நடந்து கொள்ளும் முறைகளையும் நடத்திக்காட்டி, இல்வாழ்வுக்கே ஓர் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிறார், ‘குடும்ப விளக்கு’ என்னும் நூலின் வாயிலாக.

இசைப்பாடல்கள் இயற்றுவதிலும் நம் கவிஞர் வல்லவர் என்பதை “இசையமுது” என்னும் பெயர் தாங்கிய நூல்கள் வெளிப்படுத்துகின்றன. இந் நூல்களின் வாயிலாக ஒரு புரட்சியை-மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ளார். மேட்டுக் குடியினர்தாம் பாடல்களில் உலா வருதல் உண்டு. எளிய வாழ்வினராகிய வண்டிக்காரன், மாடு மேய்ப்பவன், உழத்தி, ஆலைத் தொழிலாளி, கூடை முறம் கட்டுவோர் என்று இவரனைவரையும் இசையமுதிலே நடமாட விட்டவர் நம் கவிஞர்.

இனி அவர்தம் பாடல்களிலே ஓரிரு கருத்துகளை நோக்குவோம். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிக்கும்போது அவர்தம் பாடல்கள் ஊழிக்காலப் பெரு நெருப்பைக் கக்கிக் கொண்டு வருவதைக் காணலாம். நம் பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்ற பெயருக்கே உரியவர் என்பதற்கும் மறுமலர்ச்சிக் கவிஞர் என மாநிலமே மதிக்கத்தக்கவர் என்பதற்கும் அவர் தம் பாடல் ஒவ்வொன்றும் சான்று பகரும்.

“ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம்

உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்”

எனவும்,

“ஓடப்பராயிருக்கும் ஏழை யப்பர்
உதையப்பராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவர் உணரப்பாநீ”

எனவும்,

“வலியோர் சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
கொலைவாளினை எடடாமிகு

கொடியோர் செயல் அறவே”

எனவும் பாடியுள்ள பாடற்பகுதிகளால் உணர்ச்சி வேகத்தையும் புதிய உலகைக் காணத் துடிதுடிக்கும் மறுமலர்ச்சிப் பேரார்வத்தையும் நம்மால் காண முடிகிறது. இவ்வாறு உணர்ச்சியூட்டியுங்கூடத் தன்னம்பிக்கையிழந்து தன்னாற்றலை அறியாது, சோம்பிக் கிடக்கும் மாந்தர்தனை நோக்கிப்,