பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

V


‘இருபதாம் நூற்றாண்டில் கவிதை’ அருமையான வரலாற்றுத் தொகுப்பு.

“திரைப்படத் துறையில் வரும் இசைப்பாடல்கள் பெரும்பாலும் கவிதைத் தன்மை யிழந்து வடிவின்றி மரபின்றி மின்மினிகள் போலப் பளிச்சிட்டு உலா வருகின்றன” என்கிறார். நல்ல வேளை? கவிஞர் இப்போது உயிரோடில்லை. ‘மலை மலை’ பாட்டையும், கண்ட சொற்களை எல்லாம் கலந்து பாடப்படும் ‘கானா’ப் பாட்டுகளையும் கவிஞர் கேட்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ‘தொழில்’ என்றும், படம் எடுக்கும் முதலாளியின் விருப்பத்திற்கும் பாடும் ‘வணிகம்’ என்றும் சொல்லி, திரைத்துறைப் பாடல்கள் முற்றிலும் ‘தமிழ்க்கேடு’ விளைவிக்கின்றன. கவிஞர் வருத்தம் இன்று கடலளவு வருத்தமாகியிருக்கிறது.

மரபுக் கவிஞராக, பாவேந்தரைப் போல் விடாப்பிடியாக வந்த கவிஞராதலால் இலக்கணத்தைப் புறக்கணித்து விட்டுப் பாடுபவர்களைச் சாடுகின்றார். “கல்லாக் கவிஞர், இலக்கணம் வேண்டாவெனும் பொல்லாக் கொள்கையுடையவராகவே இருத்தல் இயல்பு.” என்கிறார் கவிஞர்.

“அரைப் படிப்புப் பயல்கள் எல்லாம் கவிஞனாகி”

என்று சாடுகிறார் ம.இலெ. தங்கப்பா.

ஆனால் இன்றைய புதுக்கவிதையுலகம் இப்படி இருக்கிறதா? தனியே ஆராய வேண்டும்.

‘பொருள்களுடன் ஒன்றும் பொழுதுதான் உண்மைக் கவிதைகள் பிறக்கின்றன’ என்பதைச் சில எடுத்துக்காட்டுகளுடன் சிறப்பாக எழுதியுள்ளார். ‘ஒல்லையூர் நாட்டே’ என முடியும் பாட்டின் அவலம் உணர்ந்து எழுதியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது. எனது நூலில் இதனை விரித்துரைத்து நானும் “கண்ணீர்” சிந்தியுள்ளேன் என்பதை நினைவிற் கொள்கின்றேன்.

மறுமலர்ச்சிக் கருத்துகளைக் கனல் தெறிக்கப் பாடியுள்ள பாவேந்தரைப் பற்றிய அருமையான கட்டுரை ஒன்று;

கவிதையின் சொல்லாட்சிச் சிறப்பை எடுத்து நயம் காணும் கட்டுரை ஒன்று.

உண்மையில் கவிதையைத் தூக்கி நிறுத்துவது சொல்லாட்சிதான். அதனை, ‘Poetic Diction’ என்பர். தமிழ்க் கவிதைகளில் தான் எத்தனை சொல் நயங்கள்? அதேபோல, ‘பாவேந்தரின் வாழ்வும் இலக்கியப் பணியும்’ எனும் கட்டுரையும் முழுமையான படப்பிடிப்பாக உள்ளது. பாரதியார் கைம்மைக் கொடுமையை உணர்ந்தவர்தான். காந்தியார் கருத்தை மறுத்து ‘இவர் புருவி விதவைகளைப் பெருக்கப் பார்க்கின்றாரே!’ என்று எழுதியவரும் பாரதியார் தான். ஆனால் பாரதியார் கைம்மைக் கொடுமை பற்றி ஏன் ஒரு பாடல் கூடப்-