பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9

பாவேந்தர் வாழ்வும் இலக்கியப் பணியும்


போர்க்களம்

பாவேந்தர் வரலாற்றைக் காணும்பொழுது, அவர்தம் வாழ்க்கை ஒரு போராட்டக் களமாகவே இருந்து வந்ததை நாம் உணர்கிறோம். துணிச்சல் என்னும் கணிச்சி கொண்டு, ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி, எதிர்ப்புகள் என்னுங் களிறெறிந்து பெயருங் காளையாகவே வாழ்ந்திருக்கிறார். அவர்தம் இலக்கியப் பணியும் ஒப்பற்ற சமர்க்களமாகவே இயங்கியதை நாம் அறிகிறோம். தமிழினத்தின் விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்ட பணியாதலின் இலக்கியப் பணியையும் அமர்க்களமாகவே ஆக்கிக்கொண்டு, ‘தருக்கினால் பிறதேசத்தார் தமிழன்பால் என் நாட்டான்பால் வெறுப்புறுங் குற்றஞ் செய்தார் ஆதலால் விரைந்து அன்னாரை நொறுக்கினார் முதுகெலும்பை’ என்றும், ‘கொலை வாளினை எடடாமிகு கொடியோர் செயல் அறவே’ என்றும் எக்காளம் இடுகிறார். இப் போர்க்கள வரலாறுதான் பாவேந்தரின் வாழ்க்கையாகும்.

இளவேனிற் பருவத்தே பூஞ்சோலையிற் கூவும் மாங்குயில் இனிய குரலிற் கூவும். அது நமக்குக் ‘கீத’மாகக் கேட்கும். ஆனால் குயில், பாலையிலே துரத்தப்படும்போது - பறந்து திரியும் உரிமை தடுக்கப்படும்போது - நசுக்கப்படும் போது இனிய குரலிலா கூவும்? உரத்த குரலில்தானே கத்தும். நமது புதுவைக் குயிலும் தனக்குரிய சோலையிலிருந்து பாலைக்குத் துரத்தப்பட்டபோது உரிமை பறிக்கப்பட்டபோது - அழுத்தப்பட்டபோது உரத்தும் கடுத்தும் குரல் எழுப்பியது. அக் குரலில் சூடு மிகுந்து காணப்பட்டது. ஆதலின் அக் குரல் நெருப்புக் குரலாகவே தோன்றுகிறது.

ஏன் நெருப்புக் குரலாயிற்று ?

பாவேந்தர் கறுத்தெழக் காரணமென்ன? அவர்தம் இலக்கியக் குரல் நெருப்புக் குரலாகியது ஏன்? அவரே காரணம் கூறுகிறார். ‘தமிழருக்கும் புரட்சி மனப்பான்மை, தம் பகைவரால் நசுக்கப்படுவதிலிருந்து உண்டாகும். ஆகையால் தமிழர், தம் பகையால் அடையும் எவ்விதத் தொல்லைகளையும் நான்