பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் வாழ்வும் இலக்கியப் பணியும்

57


என்று முகத்தில் அறைந்தாற் போற் கூறிவிடுகிறார். எத்துணைக் கோடியென்று இயம்பவில்லை. கோடி வெண்பொன்னா? செம்பொன்னா? அதுவும் கூறவில்லை. பொதுவாகக் ‘கோடி’ என்று மட்டுங் கூறுகிறது பாடல். எத்துணைக் கோடி எனினும் சரி, அது வெண்பொன்னாகினும் சரி, செம்பொன்னாகினும் சரி, “தொடேன்” என மறுத்துவிடுகிறார். கோடி தருவதாகச் சொல்லளவில் நில்லாது, இட்டு அழைத்தாலும் என்று கூறுகிறார். அஃதாவது எதிரில் கொட்டி வைத்துக்கொண்டு அழைத்தாலும் தொடேன் என்ற உறுதிப்பாட்டை நமக்கு விளக்குகிறார். ஆனால் இன்றுள்ள ‘தொண்டு’ விந்தையானது “தலைவருடைய முகமூடியைக் கிழித்தெறிகிறேன் பார்” என்று வீரமொழி புகன்று, வெளியில் வந்து, புதுக்கட்சி தொடங்கிச் சில திங்களில் ‘தலைவர் எனக்குப் பதவி தருவதாகச் சொல்கிறார். அதனால் கட்சியைக் கலைத்துவிட்டுத் தலைவரோடு கலந்துவிட்டேன்’ என்று மூச்சு வாங்க ஓடுகின்றனர் தொண்டர். இதுவா தொண்டு?

உரிமைத் தமிழன்

பாரதிதாசன் உண்மை, நியாயம், அறிவு முதலியவற்றைச் சிறிதும் விட்டுக் கொடுக்க இசையாத, இயற்கையான ஒரு பிடிவாதம் உடையவராதலால், அவர் புகழை எதிர்பாராமல், தம் கொள்கைகளில் விடாப்பிடியாய் இருந்து வருகிறார் என்று தந்தை பெரியார் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. அவர் புகழை எதிர்பார்க்கவே இல்லை. உண்மை நிலைமை இவ்வாறிருக்கச் சிலர், ‘பாரதிதாசன் இந்தியத் தமிழனாக வாழ எண்ணாமல், தமிழனாக வாழ எண்ணுவதால் இவர் புகழ் குன்றுகிறது’ என்று குறை கூறுகின்றனர்.

தமிழனுக்கு மட்டுந்தான் இந்த அறிவுரை கூறப்படுகிறதே தவிர மற்றைய மாநிலத்தானுக்கு எவனும் கூற முற்படுவதில்லை. மற்ற மாநிலத்தான் வங்காளி இந்தியனாக, மராட்டிய இந்தியனாக, பஞ்சாபி இந்தியனாக, கேரள இந்தியனாக, கன்னட இந்தியனாக வாழும்போது இவன் மட்டும் ஏன் தமிழ இந்தியனாக வாழக் கூடாது? இந்தியத் தமிழனுக்கும் தமிழ இந்தியனுக்கும் சிறு வேறுபாடு உண்டு. இந்தியாவுக்குள் அடைக்கப்பட்ட தமிழன் இந்தியத் தமிழன். தமிழனாகவே வாழ்ந்து இந்தியாவுடன் சேர்ந்து நிற்பவன் தமிழ இந்தியன்.

பாரதியார் பாடல்களை உற்று நோக்கின் பாரதிகூடத் தமிழ இந்தியனாகத் தான் வாழ்ந்திருக்கிறார் என்பது புலனாகும். அதுவுங்கூட அன்றுள்ள சூழல், அவரை அவ்வாறு எண்ண வைத்தது. அவர் விடுதலைக்குப் பின்னும் வாழ்ந்திருப்பின் தமிழனாக மட்டுமே வாழ்ந்திருப்பார் என்பது உறுதி. பாரதிதாசன் விடுதலைக்குப் பின்னும் வாழ்ந்தமையாலேதான் இந்தியனாக வாழ்ந்த அவர், தமிழனாக வாழ முற்பட்டார் எனத் தெளிதல் வேண்டும். காலமும் சூழலும் தமிழக நிலைமையை உணர்த்தின. உண்மைத் தமிழனாக உரிமைத் தமிழனாக உயர்ந்தார் அவர்.