பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் வாழ்வும் இலக்கியப் பணியும்

59


கேட்டோர் இதன் அருமை பெருமைகளை நன்கறிவர். விசை யொடிந்த தேகத்தில் விறுவிறுப்பை ஊட்டிய அதே நெருப்புக் குரல் ஊனை, உயிரை உருக்கும் இனிப்புக் குரலாகவும் கேட்பதுண்டு.

கட்டுப்பாடற்ற கவிஞன்

கவிஞன், கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவன். இலக்கண நெறிகளுக்குங் கூட அவன் கட்டுப்பட மாட்டான்; இலக்கணத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து, அதனை ஏவல் கொள்ளும் அதிகாரம் படைத்தவன். எவ்வகைச் சட்ட திட்டங்களும், கட்டுப்பாடுகளும் அவனை அடிமைப் படுத்திவிட முடியாது; அடக்கியாளவும் முடியாது. தன் விருப்பம் போல் இன்ப வானில் சிறகடித்துத் திரியும் வானம்பாடிதான் கவிஞன். நம் கவிஞர் உள்ளமும் அத்தகையதே என்பதைப் பாவேந்தர் பாடல் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் 8.11.1946-ல் வருகிறது. அஃது அவருக்கு விடுதலை நாளாகத் தோன்றுகிறது. ‘எட்டுப் பதினொன்று நாற்பத்தாறிட்ட எழிலுறு நாள்’ என்னுங் கட்டளைக் கலித்துறைப் பாடலில், அந் நாளினை ‘எழிலுறு நாள்’ எனச் சுட்டுகிறார். அஃது அவருக்கு ஏன் எழிலுறு நாளாயிற்று? மேலதிகாரிகளின் அடக்குமுறை பள்ளியின் சட்ட திட்டங்கள் எதுவுமே இனி இவரைக் கட்டுப்படுத்த முடியாதல்லவா? சுதந்திரப் பறவையாக ஆக்கும் நாள் அந்த நாளல்லவா? அதனால் அந்தப் பொன்னாள் அவருக்கு எழிலுறு நாளாகத் தோன்றுகிறது. ‘மேலுமெனைக் கட்டுப்படுத்துவ தொன்றில்லை’ என்று தமது உள்ளத்துணர்வை அவரே அப் பாடலில் வெளிப்படுத்தி விடுகிறார்.

வருங்கால உணர்வு

இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பாடுவதோடமையாது எதிர்காலத்தையும் உணர்ந்து பாடுவதுதான் உண்மைக் கவிஞன் இயல்பாகும். நம் பாவேந்தரும் வருங்காலத் தேவைகளை உணர்ந்து பல மேலான கருத்துகளைப் பாடியுள்ளார். போரால் விளையுந் தீமைகளைக் கண்டறிந்து, மனித இனத்தைக் கவ்விக் கொண்டுள்ள அச்சவுணர்வை அகற்றி, அவர்களை அமைதியாக வாழவிடுதல் வேண்டும் என்ற நல்லுணர்வுடன் இந்தியா, உருசியா போன்ற நாடுகள் அரிதின் முயன்று வருகின்றன. இந் நன்முயற்சி உலகில் அரும்புவதன் முன்னரே நம் பாவேந்தர்,

“புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்”

என்று உறுதியுடன் முடிவு கட்டுகிறார்.