பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

முடியரசன்


குடும்பக் கட்டுப்பாட்டியக்கம் இன்று இந்தியாவிலும் உலகிற் பிற பகுதிகளிலும் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வெண்ணம் கருக்கொள்ளு முன்பே நம் பாவேந்தர் ‘காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்துதற்குக் கதவொன்று காண்போம்’ என முன்கூட்டியே திட்டம் தந்துள்ளார்.

பட்டென்று பேசும் இயல்பு

பாவேந்தர்பால் அழுத்தமான பற்றும், தன்மான இயக்கத்தில் ஈடுபாடும் தமிழ் காக்கப் போராடுந் திறனுங் கொண்ட பேராசிரியர் ஒருவர், சிறுகவிதை நூலொன்று அச்சிட்டுக் கரந்தைக்கு வருகை தந்த பாவேந்தரிடம் மதிப்புரை பெற நண்பர் ஒருவரை உய்த்திருந்தார். பாவேந்தர் படித்தார், குற்றுகரப் புணர்ச்சி பிரிக்கப்பட்டு, அக் குற்றுகரமும் ஓர் அசையாக அலகிடப்பட்டு, அச்சேறி பயிருந்தது. அது கவிஞரின் கண்ணையும் கருத்தையும் உறுத்தியது. அவ்வுறுத்தல் “எவன்டா இதை எழுதியது?” என்று அதட்டலாக வெளி வந்தது.

பேராசிரியர் பெயரை வந்தவர் சொன்னார், எவன் எழுதினால் என்ன இவன் எழுதிய அழகுக்கு மதிப்புரை வேறு வேண்டுமோ? என்ற சொற்கள், வந்தவர் செவியில் விழுமுன், அந்நூல் அவருடைய முகத்தில் விழுந்தது. பேராசிரியர், இவரிடம் அழுத்தமான பற்றுடையவர், தன்மான இயக்கத்தவர், தமிழ்ப் போர் மறவர் என்பது கவிஞருக்குத் தெரியும். எனினும் பட்டென்று இப்படிச் சொல்லிவிட்டார். “பற்று பரிவு, ஒட்டு உறவு எதைப் பற்றியுங் கவலைப் படமாட்டார். உள்ளத்திற் பட்டதைப் பட்டென்று சொல்வார்” என்பதற்குச் சரியான சான்றல்லவா?

குழந்தையுள்ளம்

பார்வைக்கு முரடராகத் தோற்றந் தரும் கவிஞர், குழந்தையிலும் சின்னஞ் சிறு குழந்தையாக மாறிவிடுவார். பல சமயங்களில், பல இடங்களில் அந்தக் குழந்தையுள்ளத்தைக் கண்டு நான் மகிழ்ந்து வியந்திருக்கிறேன். ஒரு சமயம் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் நிகழ்ந்த கவியரங்குக்குத் தலைமை ஏற்கப் பாவேந்தர் வந்திருந்தார். மாலை நிகழ்ச்சிக்குக் காலையிலேயே வந்துவிட்ட கவிஞர், ஓர் அறையில் படுத்திருந்தார். தமது இடக்கையை மடக்கித் தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு படுத்திருந்தார். காணச் சென்ற நாங்கள், வணக்கம், வணக்கம் என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொருவராகப் புகுந்தோம். ‘ம்ம், ம்ம்’ என்று சொல்லிக்கொண்டே படுத்திருந்த அவர், பலரும் வருவதறிந்து எழுந்து அமர்ந்தார். என்னை நோக்கி, “பாருப்பா, கூப்பிட்டுக் கிட்டு வர்ராங்க, அப்படியே விட்டுட்டுப் போயிடுராங்க, தலைக்கு ஏதாச்சும் வேணுமான்னுகூடக் கேக்கலே, கை வலியெடுத்துப் போச்சு ”என்று அவர்க்கே உரிய பாங்கில் சொன்னார். அவர்க்கருகில் மேசை மேல் ஒரு தோற்பெட்டியும், அதன் மேல் சமுக்காளம் கற்றிய தலையணையும் இருப்பதைக் கண்டு, “ஐயா!