பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

எப்படி வளரும் தமிழ்?


பாடவில்லை? பெண்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த பாரதி, அன்று பெருவழக்காகி ஒவ்வொரு குடும்பத்திலும் நிலையான அவலத்தை நிலை நிறுத்திக் கொண்ட கைம்மைக் கொடுமையை ஏன் சாடவில்லை? ஏன் பாடவில்லை? வியப்பாகவே உள்ளது. ஆனால், பாவேந்தரோ கொதித் தெழுந்து பாடுகிறார். அதைத்தான், கவிஞர் முடியரசன் ஓர் அருமையான கட்டுரையாக வடித்துள்ளார்.

தமிழின்பம் எப்போதுமே தனியின்பம் தான். எத்தனையோ கட்டிடங்களைத் தரை மட்டமாக்கிய மாறவர்மன் சுந்தரபாண்டியன் பட்டினப்பாலை அரங்கேறிய பதினாறு கால் மண்டபத்தை மட்டும் பழுதுபடுத்தவில்லை. இதை எண்ணும் போது நமக்கே ஓர் இன்ப அதிர்ச்சி! நல்ல தமிழ் இலக்கியம் அரங்கேறியதாலேயே படைவீரர்களின் நாசவேலைகளிலிருந்து அது தப்பி நிற்கிறது என்றால் அதுதான் தமிழ்ப் பெருமை.

அதனைக் கவிஞர் மிக அருமையாக எடுத்துக் காட்டுகிறார்; பண்டைய அரசியல், மன்பதை, குடும்ப நாகரிகங்களைப் பல எடுத்துக் காட்டுகள் வாயிலாக விளக்குகிறார். அப்படிப்பட்ட நாகரிகங்கள் இன்று உள்ளனவா? எண்ணிப் பார்க்கத் தூண்டும் கட்டுரை இது.

புலவர்களில் பலர் எந்த அளவுக்குத் துணிச்சல் உடையவர்கள்? மன்னனையே எதிர்த்துக் குரல் கொடுக்கும் மன வலிமை உடையவர்கள் என்பதை நாமெல்லாம் உணர்ந்திருக்கிறோம். நான் சொல்வது இந்தக் காலத் தமிழ்ப் புலவர்களை அல்ல; அதை விரிக்கின், பலபக்கக் கதைகளை எழுத வேண்டியிருக்கும்.

நான் சொல்வது, நாம் பின்பற்றுவது பண்டை புலவர்களின் நெஞ்சு நிமிர்ந்த வாழ்வை.

மன்னவனும் நீயோ? எனும் கம்பன் பாட்டு, ‘காணாது ஈற்ற.....’ எனும் புலவன் வேகம், பரிசை வேண்டா என்று தள்ளும் மான உணர்வு. புரவலனாகிய அரசனையே வம்புக்கிழுக்கும் பெருஞ்சித்திரனாரின் வேகம்.

நமது புலவர்கள் பல முறை படித்து, அதன்படி வாழ முடியுமா என்று சிந்திப்பதற்குரிய கட்டுரை “புலவர் உள்ளம்”

இறுதியாகச் சிலப்பதிகாரத்தில் நயமான இடங்கள் பலவற்றை எடுத்துக் காட்டி நயங் காட்டுகிறார் கவிஞர். எத்தனையோ பேருடைய கட்டுரைத் தொகுப்புகளைப் பார்க்கிறோம்; புரட்டுகிறோம்; பக்கங்களைத் தள்ளுகிறோம்; ஆனால் கவிஞர் முடியரசனின் இந்தத் தொகுப்பு புரட்டும் தொகுப்பன்று; உங்களை ஒரு புரட்டுப் புரட்டும் நெம்புகோல்.

வெறுமனே தள்ளக் கூடிய பக்கங்கள் அல்ல இவை; நெஞ்சில் கொள்ளக் கூடிய தமிழ்ப் பக்குவங்கள்;