பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

முடியரசன்


கவியுலகின் விடிவெள்ளியாகத் தோன்றிய பாரதியார்தாம், பெண்கள் விடுதலையுணர்வுக்கு ஒரு முழு வடிவம் கொடுத்துத் தடைகளை உடைத் தெறியும் போர் மறவனாக- முன்னோடியாக விளங்கினார் எனக் கூறின் மிகையாகாது.

பெண் விடுதலைக்குப் போர்க்குரல் எழுப்பிய பாரதியார், பெண்களின் மறுமணத்தைப் பற்றி - கைம்மைக் கொடுமையைப் பற்றிப் பாடற் பகுதியில் ஏன் ஒன்றுங் கூறாது விட்டனர் என்பது நமக்கு விந்தையாகவுள்ளது. கைம்மைக் கொடுமை, அவர் தோன்றிய இனத்திற்றான் மிகுந்து கிடந்தது, பாடலிற் பாடாது விடினும் கைம்மைக் கொடுமையை உரைநடைப் பகுதியில் அருமையாகச் சாடுகிறார்.

நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட காந்தியடிகளைப் பெரிதும் மதிப்பவர் பாரதியார். எனினும் கைம்மை பற்றிப் பேசுகையில் மதிப்புக்குரிய காந்தியடிகளைக் கடுமையாக மறுத்துவிடுகிறார். காந்தியடிகள் நடத்தி வந்த ‘நவசீவன்’ என்ற இதழில், இந்தியாவின் (கைம்பெண்டிர்) பற்றிய புள்ளி விவரங்களை ஒருவர் வெளியிட்டிருந்தார். அக் கட்டுரை பற்றிக் காந்தியடிகள் ஒரு குறிப்பும் எழுதியிருந்தார். “மேலே காட்டிய (கைம்பெண்களின்) தொகையைப் படிப்போர் அழுவார்கள் என்பது திண்ணம்” என்று குறிப்பிட்டுவிட்டு, இந்நிலையை நீக்கச் சிலவழிகளும் கூறுகிறார். இளமைப் பருவத் திருமணங்களை நிறுத்திவிடுதல் வேண்டுமென்றும் 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளைய கைம்பெண்களும் மறுமணம் செய்துகொள்ள இடங் கொடுத்தல் வேண்டுமென்றும் ஆனால் இவ்வழிகளை விருப்பமுடையோர் பின்பற்றலாமென்றும் இவற்றைப் பின்பற்றுவதில் தமக்கு விருப்பமில்லையென்றும் குறிப்பிடுகிறார்.

மேலும் கூறுகிறார்; முதல் மனைவியை இழந்தவன் பெரும்பாலும் வயது முதிர்ந்தவனாகவே இருப்பான். அவன் மறுபடி ஓரிளம் பெண்ணை மணந்தால், அவன் விரைவில் இறந்து போய் அப் பெண்ணைக் கைம்பெண்ணாக்கி விடுகிறான். ஆதலால், ஒரு முறை மனைவியை இழந்தோர் பிறகு மணஞ் செய்யாதிருப்பதே கைம்பெண்களின் தொகையைக் குறைக்க வழியாகும் என்னுங் கருத்துப்படக் குறிப்பிடுகிறார்.

காந்தியடிகளின் இக் கருத்தைப் பாரதியார் வன்மையாக மறுக்கிறார், அவர் எழுதுவதாவது: “ஸ்திரீவிதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், ஸ்ரீமான் காந்தி புருஷ விதவைகளின் தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார்” எனக் கிண்டல் செய்துவிட்டு, எவ்வகையாலே நோக்கு மிடத்தும் ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம் நியாய விரோதமானது; சாத்தியப் படாதது; பயனற்றது” என மறுத்துவிடுகிறார் கவிஞர்.