பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

முடியரசன்


என்று பாடுகின்றார். தமிழை அமுதென்றும் அதன் சுவையறிந்தோர் அமரர் போல வாழ்வர் என்றும் கூறுகின்றார். “தமிழுக்கும் அமுதென்று பேர்” எனப் பாவேந்தர் பாரதிதாசனும் கூறுகிறார்.

“ஆயுந் தொறுந்தொறும் இன்பந்தருந்தமிழ்”

என்று பிறிதொரு சான்றோர் மொழியும் உண்டு. தமிழ் இன்பம் தரவல்லதுதான். எனினும் ஆயுந்தொறும் ஆயுந்தொறும் புதுவகையான இன்பம் தரும் என்கிறார்.

ஏட்டுச் சுவடிகளை அலைந்தலைந்து, தேடித் தேடித் துருவி ஆராய்ந்து பழம்பெரும் நூல்களைப் பதிப்பித்து, அச் செல்வங்களை நமக்களித்து மகிழ்ந்து, தமிழ்த் தாத்தாவெனப் போற்றப்பட்ட உ.வே. சாமிநாதையர் அவர்கள், தாம் பதிப்பித்த பதிற்றுப்பத்து என்னும் நூலின் முகவுரையில் தமிழ்நூல்களால் தாம் பெற்ற இன்பத்தைக் குறிப்பிடுகின்றார். “இத்தகைய நூல்களோடு பழகுகையில் எனக்கு ஊக்கமும், உலகத்தை மறந்துவிடும் நிலையும் உண்டாகின்றன. நூலை விட்டு என் கண்களை எடுத்து நோக்கினால் உலகமும் என் தளர்ச்சியும் புலனாகின்றன” எனக் குறிப்பிடுகின்றார். உலகை மறந்துவிடும் நிலை எப்பொழுது ஏற்படும்? இன்பக் களிப்பில் திளைக்கும் பொழுதன்றோ? தளர்ச்சி எப்பொழுது நீங்கும்? மகிழ்ச்சிப் பெருக்காலன்றோ ? தமிழ் இன்பந்தரும் இயல்பினது; துன்பந் துடைக்கவல்லது என்பதை மெய்ப்பிக்க இதனினும் சிறந்த சான்று வேறுளதோ?

நாலடியாரும் இவ்வின்பத்துக்கு நல்லதொரு சான்று நவில்கின்றது. மேலுலக இன்பம் சிறந்ததா? தமிழின்பம் சிறந்ததா? என்றால் தமிழின்பம்தான் சிறந்தது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது. உலக மக்களெல்லாம் மேலுலக இன்பந்தான் சிறந்தது என்பரே என்றால், தமிழின்பத்தினும் அது இனியது என்றால் மேலுலக இன்பத்தைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று விடை தருகிறது நாலடி.

குற்றமற்ற நூற்கேள்வி உடையவரும் தம்முடை பகையில்லாதவரும் கூர்த்த மதியினரும் ஆகிய தமிழ்ச் சான்றோருடன் கூடி உரையாடி மகிழ்வதனாற் பெறும் இன்பத்தைவிட மேலுலக இன்பம் இனியது என்றால் பிறகு அதனைப் பற்றிக் கவனிக்கலாம் என்று கூறுகின்றது.

“தவலருந்தொல்கேள்வித் தன்மையுடையார்
இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ
நகலினினிதாயிற் காண்பாமகல்வானத்(து)

உம்பருறைவார் பதி”

என்னும் நாலடியார்ப் பாட்டு இக் கருத்தைக் கூறுகிறது.

பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டுள் ஒரு பாட்டு. இது கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர், கரிகாற் பெருவளத்தானைப் பாடிய பாட்டு.