பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12

பார் போற்றும் தமிழர் நாகரிகம்

தமிழர் நாகரிகம் உலகிலே உயர்ந்தது; தொன்மைச் சிறப்புடையது; பாராட்டத்தக்க பாங்குடையது என்றெல்லாம் வரலாற்றாளர் குறிப்பிடுவர். அரசு, மன்பதை, குடும்பம் என வகுத்துக்கொண்டு, அவற்றின் நாகரிகக் கோட்பாடுகளாகப் பண்டை இலக்கியங்கள் கூறுவனவற்றைக் காண்போம்.

முதலில் நாகரிகம், பண்பாடு இவற்றின் வேறுபாட்டைத் தெரிந்து கொள்வது சாலச் சிறந்தது. நகரமைப்பு, இல்ல அமைப்பு, தெருவமைப்பு, உடை, உணவு முதலியன சிறப்புற அமைந்திருப்பது நாகரிகம் எனப்படும். உள்ளம், எண்ணம், ஒழுகலாறு முதலியன சிறப்புற அமைவது பண்பாடு எனப்படும். நாகரிகம் புறத்தைப் பொறுத்தது; பண்பாடு அகத்தைப் பொறுத்தது. எனினும் நாகரிகம் என்னும் சொல், அகத்தின் செயலையும் புறத்தின் செயலையும் சுட்டும் பொதுச் சொல்லாக வருதலும் உண்டு. இக் கட்டுரையில் அச் சொல் பொதுச் சொல்லாகவே குறிப்பிடப்படுகிறது.

பண்டைக் காலத்தே அரசு எத்தகைய நாகரிகக் கோட்பாடுகளைக் கொண்டிருந்தது எனக் காண்போம்.

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னர் உயிர்த்தேமலர்தலை உலகம்” (புறம்-186)

என மோசிகீரனார் என்னும் புலவர், உலகத்துக்கு அரசன் உயிராவான் என்று நுவல்கின்றார். உயிரானது தான் உறையும் உடலுக்குத் தீங்கு செய்யக் கருதாது. அதுபோல அரசன் உலகுக்குத் தீங்கு செய்யக் கருதாது காத்தல் வேண்டும் என்பது கருத்து. உடலியக்கத்துக்கு உயிர் இன்றியமையாது வேண்டப்படுவது போல உலக இயக்கத்துக்கு மன்னன் இன்றியமையாதவன் என்னும் உயரிய கோட்பாடு அக் காலத்தே நிலவி வந்துள்ளது.

கம்பன் பாடலில் ஈடுபாடு கொண்டோர் சிலர். புறநானூற்றுக் கருத்தை இக் காலத்தே எள்ளி நகையாடுவதுண்டு. கம்பன் அரசனைக் குறிப்பிடுகையில் ‘உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்’ எனக் குறிப்பிடுவான். அரசனை உடம்பாகவும் மக்களை உயிராகவும் குறிப்பிடுகின்றான். கம்பன் பற்றாளர், இதனை எடுத்துக்காட்டி, “புறநானூற்றுக் கருத்தைப் புறங்கண்டனன் கம்பன்,