பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

முடியரசன்


புரட்சி செய்துவிட்டான் கம்பன்” என்று பெருங்குர லெடுத்துப் பேசுவர். இதிலென்ன புரட்சி கண்டனரோ? தெரியவில்லை! புறநானூறு, மன்னனை உயிர் என்றது. கம்பனோ உடம்பு என்றனன். உடம்புக்குத் தீங்கு செய்யாது உயிர். உடம்பும் உயிருக்குத் தீங்கு செய்யாது. அவ்வாறே மன்னனும் மக்களும் ஒருவர்க்கொருவர் தீங்கு செய்யக் கருதக் கூடாது என்பது கருத்து. உயிருக்கும் உடம்புக்கும் ஏற்றத்தாழ்வில்லை. அதுபோல அரசனுக்கும் மக்களுக்கும் ஏற்றத் தாழ்வில்லை. உயிரும் உடம்பும் இணைந்தால் மாந்தன். அரசனும் மக்களும் இணைந்தால் நாடு. ஒன்றின்றி மற்றொன்றில்லை. மோசிகீரனாரும் கம்பரும் ஒத்த கருத்தினரே. மன்னன் மக்களுக்கும், மக்கள் மன்னனுக்கும் இன்றியமையாதவர் என்பது கருத்து.

கம்பனடியார்கள் கூற்றின்படி கம்பன் கருத்தைப் புரட்சியென்று ஒத்துக் கொண்டாலும் கம்பனுக்கு முன்பே சாத்தனார் தமது மணிமேகலைக் காப்பியத்தில் இக் கருத்தை வெளிப்படுத்திவிட்டார். ஆதலால், அப் பெருமை சாத்தனார்க் குரியதேயன்றிக் கம்பனுக்குரியதன்று.

மணிமேகலையின்பாற் காமங்கொண்ட உதயகுமரன், அவளைப் பற்றிய ணம் மீதூர அமளியின் மிசைப் பொருந்தாதிருந்தான். அவன் முன்தோன் றிய மணிமேகலா தெய்வம் அவனுக்கு அறிவுரை புகல்கிறது. “மன்னனே, தவத் திறம் பூண்ட மணிமேகலையின் மேல் வைத்த உன் எண்ணத்தை ஒழித்துவிடு. ஒழித்திலையேல்,

“மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதியின்றாகும்” (து.எ.காதை )

என்று அத் தெய்வம் மொழிகிறது. இவ் வரிகளில் மன்னனை உடம்பாகவும் மக்களை உயிராகவும் கூறுகிறார் சாத்தனார். ஆதலின், அப் புரட்சிக் கருத்துக்குரியர் யாவரென எளிதின் அறியலாம்.

பண்டைய முடியாட்சியை இன்றைய முற்போக்காளர் சிலர், கொடிய ஆட்சியெனக் குறைகூறுதலும் உண்டு. குடியாட்சியில் மக்களைப் பற்றிய கவலையில்லாது கோலோச்கவோர் பலராயினர் என்பதை நடுவுநிலையாளர் நன்குணர்வர். பண்டைய மன்னன் நன்னன் என்பான் ஒருவன் மட்டுமே பழிக்கப்படுகின்றானே தவிர, மற்றையோர் மக்கள் நலத்திற் கண்ணுங் கருத்துமாக இருந்தனர் என்பதை நம் பண்டைய இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. ஒன்றிரண்டு கூறுகின்றேன்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், இளம் பருவத்திலே அரசுக் கட்டிலேறினான். அப்பொழுது பகையரசர் இவன் மேல் படை யெடுத்தனர். அதனை யறிந்த பாண்டியன் சீறியெழுந்து, வஞ்சினம்(சபதம்) கூறுகிறான். “என்னை இளையன் எனக் கருதிப் படையெடுத்த பகைவரைத் தோற்றோடச் செய்யேனாகின்,