பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

புலவர் உள்ளம்

முற்போக்காளர் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வோர் சிலர், பண்டைப் புலவரை எள்ளி நகையாடுதலுண்டு. அப் புலவர்கள் இரந்து வாழ்ந்தோர், அதற்காக மன்னரைப் புகழ்ந்து திரிந்தோர் என்றெல்லாம் இகழ்ந்து பேசியும் எழுதியும் வருதலைக் காணுங்கால் நெஞ்சம் வெதும்பும். அதனால், அப் புலவர் பெருமக்கள் எள்ளலுக்கும் இகழ்ச்சிக்கும் உரியவர்தாமா? அவர்தம் உள்ளம் எத்தகு சிறப்பு வாய்ந்தது, பெருமிதம் வாய்ந்தது, அகன்று விரிந்து பரந்தது, இரங்கியருளுந் தன்மையது என்பதற்குப் பல சான்றுகள் உள.

பண்டைப் புலவர்கள் இரந்து வாழ்ந்தோர்தாம், எனினும் அவ் வாழ்க்கைக் காகத் தகுதியிலாரைப் புகழ்ந்து பாடாதவர்கள். தம் நிலையினின்றும் தாழ்ந்துவிடாத பெருந்தன்மையுடையவர்கள்; அடிமை மனப்பான்மையற்ற வர்கள், உரிமைப் போக்கும் தன்மான உணர்வும் கொண்டவர்கள்; தவறு காணின் மன்னனாயினும் இடித்துரைக்கும் இயல்பினர். முற்போக்காளர் கூறுவது போல இகழ்ச்சிக்குரியரல்லர். புகழ்ச்சிக்கும் பராவுதற்கும் உரியர். புலவர் பெருமக்கள் நாட்டின் சொத்தாக அக் காலத்தே கருதப்பட்டனர். அதனால் மன்னர்கள் அவர்களைக் காப்பது தம் கடமையெனக் கருதினர். புலவர் உள்ளமும் பொருள் தேடும் முயற்சியில் ஈடுபடாது தமிழாய்வதிலும் பாடல் புனைவதிலும் ஈடுபட்டிருந்தது. தம்மை நினைந்தவர் தமிழை மறப்பர்; தமிழை நினைந்தவர் தம்மை மறப்பர். அதனால் வேண்டும்பொழுது மன்னரிடம் சென்று உரிமையுடன் பரிசில் வேண்டுவர். மன்னரும் மனமுவந்து வேண்டுவன ஈவர். அஃதன்றி இகழ்வுக்குரிய இரவலராகப் புலவர் வாழ்ந்தாரல்லர்.

வன்பரணர் என்னும் புலவர் பெருமான் கண்டீரக் கோப் பெருநள்ளியை நோக்கிப் பாடுகிறார். “நள்ளி! நீ எம்மனோர்க்கு வேண்டுவன தந்து காத்தலால், தகுதியில்லா மன்னரைப் புகழ்ந்து பாட விரும்பி, அவர் செய்யாதனவற்றைச் செய்ததாகச் சொல்லா எம்முடைய நா” என்று கூறுகிறார்.

“பீடின் மன்னர்ப்புகழ்ச்சி வேண்டிச்
செய்யாகூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று எம்சிறு செந்நாவே” (புறம். 148)