பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் உள்ளம்

43


இதுதான் அவர் கூறிய பாடல். இப் பாடலில் ‘எம் சிறு செந்நா’ என்ற பகுதிதான் பாராட்டுக்குரியது. எம் நா, பொய் கூறாது என்பதைச் ‘செந்நா’ எனப் பெருமையாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு கூறுவதால் தற்புகழ்ச்சியாகி விடுமோ என்பதால் ‘சிறு நா’ என அடக்கமாகக் குறிப்பிடுகிறார். இத்தகு புலவர் இகழ்ச்சிக்குரியவரா?

பரிசில் கடாநிலை என்பது புறத்துறையுள் ஒன்று. அஃதாவது தனக்கு இன்ன பரிசில் வேண்டும் என ஒருவனிடம் வேண்டுவது. அத் துறையமைப்பில் பெருஞ்சித்திரனார் என்ற புலவர், குமணன் என்ற வள்ளலிடம் பரிசில் வேண்டுவதாகப் பாடுகிறார். “குமண, என் குடும்பமே வறுமையில் வாடுகிறது; அக் குடும்பமும், வறுமையில் வாடும் என் சுற்றமும் மகிழும்படி பெரும் பரிசிலைத் தரினும் முகம் மாறித் தருவதாயின் அப் பரிசிலைக் கொள்ளேன்; யான் இன்புற நீ மகிழ்ந்து விரைந்து தந்தால், அது குன்றிமணி யளவினதாயினும் மகிழ்ந்து. ஏற்றுக் கொள்வேன்” எனப் புறநானூற்றில் 159ஆம் பாடலில் கூறுகிறார். மகிழ்ந்து தந்தால் தினைத்துணையாகினும் கொள்வேன். விருப்பமின்றித் தரின் பனைத்துணை யாகினும் கொள்ளேன் என்று கூறும் புலவர் எள்ளலுக்குரியவரா? பரிசிலுக்கு ஏங்கித் திரியும் இயல்பினரா?

மேலும் பெருஞ்சித்திரனார், குமணனிடம் எத்தகு பரிசில் வேண்டுகிறார்? வறுமையில் வாடும் அவர், வறுமை நீங்கப் பொருள்தானே வேண்டுதல் வேண்டும். அதனை விடுத்து, மற்றொன்று வேண்டுகிறார். “குமண, வேந்தர் நாணும்படியாக யான் களிற்றின் மீது ஊர்ந்து செல்லும் விருப்புடன் உன்னை நாடி வந்துள்ளேன்” என்று கூறுகிறார்.

“உயர்மருப் பேந்திய வரைமருள் நோன்பகடு
ஒளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில்
படுமணி இரட்ட ஏறிச்செம்மாந்து
செலல்நசைஇ உற்றனன்............
............................................
வேந்தர் நாணப்பெயர்வேன்” (புறம் - 161)

களிற்றின் மேற் செம்மாந்து செல்லுதல் வேண்டுமாம்; வேந்தர் நாணச் செல்லுதல் வேண்டுமாம். வேந்தர் நாணும்படி, செம்மாந்து செல்ல விரும்பும் புலவர், எவ்வாறு இகழ்ச்சிக்கு உரியராவர்? சற்றேனும் எண்ணிப் பார்த்தல் வேண்டாவா?

பானையிற் சோறின்றி வறுமையில் வாடிய புலவர், பரிசிலாக யானை வேண்டியது ஏன்? பெருஞ்சித்திரனார் குமணனிடம் வரும் முன்னர், வெளிமான் என்பானிடம் பரிசில் பெறச் சென்றார். அவன் துயின்று கொண்டிருந்தமையால், ‘பரிசில் கொடு’ எனத் தன் இளவலிடங் கூறினான். அவன் சிறிது கொடுக்கி-