பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் உள்ளம்

81


ஊரையுடைய மன்னராயினும் எம் பெருமையறிந் தொழுகும் பண்புடையோரை யாம் வியந்து பாராட்டுவோம். யாம் எத்துணைத் துன்பம் உறினும் சிறிதும் அறிவில்லாருடைய செல்வத்தை நினையோம். அறிவுடையோரது வறுமையை யாம் உவந்து மதிப்போம்” எனத் துணிந்து கூறுகிறார்.

“மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும் பெருமயாம் உவந்து நனிபெரிதே” (புறம்-197)

இத்தகு துணிவாளர்களா பரிசிலுக்காகப் பல் காட்டுவார்கள்? தன்மான மிக்க இப் புலவர் பெருமக்களையா இகழ்ந்து பேசுவது?

புலவர் பெருமக்கள் இரந்து வாழும் இயல்பினராகினும் தம் உரிமையையோ தன்மானத்தையோ விட்டுக் கொடுக்காத இயல்பினர். மன்னவன் உயர்ந்தவன்; நாம் தாழ்ந்தவர் என எண்ணாதவர். மன்னரை யொத்த பெருமிதம் உடையவர். அரசர்க்கு அறிவுரை கூறும் அஞ்சா நெஞ்சினர். இப் பண்பு வாய்ந்தோர் பண்டைப் புலவர் என்பதற்குச் சில எடுத்துக் காட்டும் கூறுவேன்.

பிசிராந்தையார் என்ற புலவர் பெருந்தகை பாண்டியன் அறிவுடை நம்பியிடம் செல்கின்றார். சென்றவர் அவனைப் புகழ்ந்து பாடினார் அல்லர், வரி எவ்வாறு தண்டுதல் வேண்டும் என்று அறிவுரை பகர்கின்றார், செவியறிவுறூஉ என்னும் துறையமையப் பாடுகின்றார்.

“மன்னவனே, ஒருமாவுக்குக் குறைந்த நிலத்தில் விளைந்த பயிராயினும் கவளம் கவளமாகக் கொள்ளின் யானைக்குப் பல நாளைக்கு உணவாகும். நூறு செய்யாக இருப்பினும் யானை தனித்துப் புக்கு உண்ணுமாயின், அதன் வாயுட் புகும் உணவைவிட அதன் கால்கள் கெடுக்கும் உணவு மிகுதியாகும். அவ்வண்ணமே அறிவுடை அரசனும் வரி கொள்ளும் நெறியறிந்து கொள்ளின் அவனும் நாடும் தழைக்கும். அவ்வாறின்றித் தானும் சுற்றமும் விரும்பியபடி மக்கள் உளம் வருந்த வரி கொள்ளின் யானைபுக்க புலம் போலத் தானும் உண்ணான்; நாடுங் கெடும்” என்ற பேருண்மையை அவனுக்கு அறிவுறுத்துகிறார். அரசன் அருளை நாடி, அவனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறும் நோக்கம் மட்டும் அவர் கொண்டிருந்தால் அறிவுரையா கூறியிருப்பார்?

குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி, “நீ இவ்வுலகிற் சிறந்த அரசனாக விளங்க விரும்பினும், நல்ல புகழை இவ்வுலகில் நிலைநாட்ட விரும்பினும் ஒன்று கூறுவேன் கேள். மக்கள் உயிர்வாழ உணவு வேண்டும்; அவ்வுணவுப் பயிருக்கு நீர் வேண்டும். ஆதலின், அந் நீரை நிலங்குழிந்த விடத்தே தேக்கி வைக்க அணைகளைக் கட்டு. அவ்வாறு செய்யின் நின் புகழ் நிலைக்கும். செய்யாவிடின் புகழ் நிலைக்காது” என அறிவுறுத்துகிறார்.