பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


இதற்கு உதவக் கூடிய வகையில் மொழி பெயர்ப்பு நூல்கள் மிகுதியாகவே வந்துள்ளன. நேஷனல் புக் ட்ரஸ்ட், சாகித்திய அகாதமி ஆகிய நிறுவனங்கள் இவ்வகையில் பாராட்டுதலுக்குரிய பணிகளைப் புரிந்திருக்கின்றன. இதர இந்திய மொழிகளின் நல்ல நாவல்கள், சிறுகதை தொகுப்புகள், இலக்கிய வரலாறுகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளன.

ஆங்கிலம் கற்றவர்கள் உலக இலக்கியச் செல்வங்களை ஆங்கில மொழி பெயர்ப்பாகப் படித்தறியலாம், ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட, படித்துப் பயனடையத் தகுந்த விதத்தில், உலக இலக்கியங்கள் ஓரளவுக்குத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

மொழி பெயர்ப்பு நூல்களைப் படித்தே தங்களது இலக்கிய ஞானத்தையும் எழுத்தாற்றலையும் வளம் செய்து கொண்டு பெயர் பெற்றுள்ள சாதனையாளர்கள் தமிழ் எழுத்தாளர்களிடையிலும் இருக்கிறார்கள்.

விஷயங்களை விசால நோக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும்; நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உள் உந்துதல் அவசியம். அத்துடன் முயற்சி எடுத்து உழைக்கவும் வேண்டும். அப்பொழுது தான் அறிவும் திறமையும் தகுதியும் வளர்ச்சி பெற முடியும்.

எழுத்துத் துறையில் வளர்ந்து சாதனைகள் புரிய ஆசைப்படுகிறவர்கள் மேலும் மேலும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தமிழ் எழுத்தாளர்களில் பல பேர் தாங்கள் எழுதுகிறவற்றைத் தவிர, இதர எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிப்பது கிடையாது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைவது உண்டு.