பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

 இருக்கும். எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான, ரசமான பதில்கள் கிடைக்கும் என்று கூடச் சொல்லலாம்.

திடீரென்று எழுத்தாளர்களிடையே நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால், அவர்களில் பல பேர் திகைப்படையவே செய்வார்கள். தாங்கள் எதற்காக எழுதுகிறார்கள் என்று எண்ணிக்கூடப் பார்த்திராத எழுத்தாளர்கள் நிறையப் பேர் உண்டு என்பதும் தெளிவாகும்.

ஒரு சமயம் சென்னையில் இப்படி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. நான் எதற்காக எழுதுகிறேன்?’ என்று சிந்தித்துப் பதில் கூறும்படி,பதினோரு பிரபல எழுத்தாளர்கள் இலக்கியப் படைப்பாளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

பதினோரு பேரும் கட்டுரைகள் வாசித்தார்கள். ரசமான, சிந்தனை நிறைந்த கட்டுரைகள். அவற்றை பின்னர் எழுத்து பிரசுரம் தொகுத்து, புத்தகமாக வெளியிட்டது. நல்ல புத்தகம். இளைய எழுத்தாளர்களுக்கு மிகுதியும் உதவக் கூடிய கருத்துக்களைக் கொண்டது.

அப்பதினோரு பேர்களிலேயே அநேகர், அதற்கு முன்பு, நாம் ஏன் எழுதுகிறோம் என்று எண்ணிப் பார்த்தது இல்லை என்று ஒப்புக் கொண்டிருந்தார்கள். எதற்காக எழுதுகிரறோம் என்று சுயவிமர்சன ரீதியில் சிந்தனை வளர்த்திருந்தார்கள்.

இப்பொழுதும் எழுத்தாளர்களிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டு, விளக்கமான பதில்களைப் பெற்று, அவற்றை தொகுத்தால் அவை படிப்போருக்கு நல்ல விருந்தாகவே அமையும்.