பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

 இக்கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. இன்றையப் புத்தகப் பிரசுரத் தொழிலின் நிலை என்ன என்று அறிந்து கொள்ள ஆசைப்படுகிறவர்கள் நாடு நெடுகிலும் காணப்படுகிறார்கள்.

புத்தகப் பிரசுரமும், பணத்தை ஈடுபடுத்தி லாபம் பெறுகிற தோக்கத்துடன் நடத்தப்படுகிற ஒரு தொழிலாகத் தான் மதிக்கப்படுகிறது. ஆகவே. பத்திரிகைகளின் போக்கையே பிரசுரகர்த்தர்களும் பின்பற்றுகிறார்கள் . ஜனரஞ்சகமான, அதிக விற்பனை உள்ள, வாரப் பத்திரிகைகளில் எழுதி புகழ் பெற்று விடுகிற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடனடியாகப் புத்தகங்களாக வந்து விடக்கூடிய நிலைமை தமிழ் நாட்டில் இருக்கிறது.

இதில், தமிழ் வாசகர்களின் ருசியையும் இயல்பையும் எண்ணி வியக்க வேண்டிய உண்மைகள் சில எடுத்துக காட்டப்பட வேண்டும்.

பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிற ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு தொடர்கதை வெளி வருகிறது. அந்தக் கதையை லட்சக் கணக்கான பேர் படித்து முடித்திருப்பார்கள். அத் தொடர்கதை முடிந்த உடனேயே சூட்டோடு சூடாகஅது புத்தகமாக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

சில பிரபல எழுத்தாளர்களின் கதைகள் பத்திரிகையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற காலத்திலேயே, புத்தகமாகத் தயாராவதற்கான அச்சு வேலையும் நடைபெறுகிறது. பத்திரிகையில் கதை நிறைவுற்ற சில நாட்களிலேயே அது புத்தகமாக வந்து விடுகிறது. சில ஸ்டார் எழுத்தாளர்கள் விஷயத்தில் புத்தக வெளியிட்டாளர்கள் வெகு வேகமாகத்தான் செயல்படுகிறார்கள். ,