பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

 இதெல்லாம் விலை போகாது ஐயா. இவற்றை நாங்கள் பிரசுரிக்க விரும்பவில்லை என்று சொல்லி, நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்பு அல்லது கட்டுரைகளை பிரசுரகர்த்தார் திருப்பித் தரவும் மாட்டார். வெளியிடுவோம். . புத்தகமாகக் கொண்டு வந்து விடுவோம் என்று காலத்தை ஏலத்தில் விட்டுக் கொண்டே இருப்பார். மூன்று நான்கு வருடங்களுக்குப் பிறகு அதை அவரே புத்தகமாக வெளியிடவும் செய்வார்.

அதுவரை எழுத்தாளர்கள் பொறுமையோடு காத்திருக்கவேண்டியது தான்.

சிலர் பொறுமையிழந்து, சண்டை போட்டு, தங்கள் எழுத்துக்களை திருப்பி வாங்கிக் கொள்வதும் உண்டு. அப்படி வாங்கிச் செல்லப்படுகிற எழுத்துக்கள் வெளிச்சத்தைக் காண வாய்ப்பு பெறாமலே போகிறது! பிரசுரகரிடம் விட்டு வைத்திருத்தாலாவது, அவர் என்றாவது ஒரு நாள் புத்தகமாகக் கொண்டு வந்து விடுவார். எழுத்தாளருக்கு, தனது எழுத்துக்கள் புத்தகமாக வந்து விட்ட திருப்தியாவது கிட்டும். பணம் எதாவது கிடைக்குமா என்பது வேறு விஷயம் !

புத்தக வெளியீட்டாளர்கள் ஏன் இவ்விதம் தயங்குகிறார்கள்? இப்படிப்பட்ட புத்தகங்கள் விற்பனையாவதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக, தமிழ்நாட்டில், நல்ல புத்தகம் ஒன்று - அல்லது, விளம்பரப் புகழ் பெற்றிறாத எந்த எழுத்தாளருடைய புத்தகமும் ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்கு நான்கு வருடங்கள் ஆகின்றன. இது பிரசுரகர்த்தர்களின் அனுபவம்.