பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


ஒவ்வொரு வருடத்திலும் குறிப்பிட்ட காலத்தின் சிறந்த புத்தகம் என ஒன்று தேர்வு செய்யப்பட்டு, அதன் ஆசிரியருக்கு விருது வழங்குவதை சாகித்திய அகாடமி வழக்கமாகக் கொண்டிருக்கிறது. முன்பு 5,000 ரூபாய் சன்மானம் வழங்கியது. 1983 லிருந்து இத் தொகை பத்தாயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல, ஒவ்வொரு வருடமும் ஒரு சிறந்த நாவலுக்கு - அல்லது, ஆராய்ச்சி நூலுக்கு-பத்தாயிரம் ரூபாய் அளித்து வந்த ராஜா சர் அண்ணுமலை செட்டியார் நினைவுப் பரிசு அமைப்பு, அத் தொகையை இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆண்டு தோறும் ஒரு சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒரு இலட்சத்து ஒரு ரூபா பரிசாக வழங்கி, அதை எழுதிய படைப்பாளியின் பணியை கவுரவித்துப் பாராட்டுகிறது.

கோவையில் கஸ்தூரி சீனிவாசன் ரங்கநாயகி நினைவுப் பரிசு என்ற அமைப்பு வருடம் தோறும் ஒரு நல்ல நாவலை தேர்வு செய்து, அதை எழுதியவருக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறது.

சென்னை 'இலக்கியச் சிந்தனை' மாதம் தோறும் அந்த மாதத்திய சிறந்த சிறுகதை என ஒன்றை தேர்வு செய்து, அதை எழுதியவருக்கு ஐம்பது ரூபாய் அன்பளிப்பு தருகிறது. ஒரு வருடம் நிறைந்ததும், அப் பன்னிரண்டு கதைகளில் சிறந்தது என்று ஒன்றை தெரிவு செய்து, அதை எழுதியவருக்கு ஐநூறு ரூபாய் பரிசு அளிக்கிறது. அந்த பன்னிரண்டு கதைகளையும் தொகுத்து புத்தகமாக