பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


இவை மகிழ்ச்சிக்கு உரிய விஷயங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும், நடைமுறையில், இவை எல்லாம் தூரத்து வெளிச்சங்கள் தான். பல, விளம்பர வெளிச்சங்களும் கூட.

பரிசுகளுக்கு, உரிய படைப்புகளும் நபர்களும் தேர்ந்தெடுக்கப்படுவதில் குறைபாடுகள் உண்டு. தேர்வு செய்கிறவர்களின் விருப்பு வெறுப்புக்கள், குறுகிய நோக்குகள், அரசியல் கட்சி சார்புகள் போன்ற பல புற மற்றும் உள் காரணங்கள் வேலை செய்பவும் கூடும். மேலும் ஸ்தாபனங் (அமைப்பு) களின் செயல் முறைகள் பரிசுத் திட்ட விதிகள், ஆகியவற்றிலுக் குறைகள் உள்ளன.

இவை போன்ற காரணங்களினால், விருதுகள் - பரிசுகள் வழங்கப்படுதல்களில் எப்போதும் குறைகள் இருந்து கொண்டே இருக்கும். இது பொது நியதி.

உலகத்தின் மிகச் சிறந்த பரிசு என்றும் மதிக்கப்படுகிற நோபல் பரிசு வழங்கப்படுவதிலே கூட ஏகப்பட்ட குறைபாடுகள், விருப்பு வெறுப்புகள் உள் நோக்கங்கள், மறைமுகச் செயல்கள், அரசியல் கரரணங்கள் எல்லாம் வேலை செய்கின்றன என்று கண்டனக் குரல்கள் காலம் தோறும் எழுகின்றன. இவ் உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு, ஆர்தர் ஹெய்லி என்ற எழுத்தாளர்-சுவாரஸ்யமான நாவல்கள் பல எழுதிப் புகழ் பெற்றவர். 'தி பிரைஸ்' என்ற நாவலை எழுதியிருக்கிறார். நோபல் பரிசு சம்பந்தமான அநேக உண்மைகளை அது வெளிச்சப்படுத்துகிறது.