பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


எந்த நாட்டிலும், எந்த மொழியிலுமே, உண்மையான தகுதி - திறமை - உழைப்பு உரிய கவனிப்பைப் பெறுவதில்லை. உரிய முறையில் கவுரவிக்கப்படுவதில்லை; அவற்றைப் பெற்றுள்ளவர்களுக்கு நியாயம் வழங்கப்படுவதில்லை என்ற குறை கூறல் காலகாலமாக இருந்து வருகிறது. இப்பவும் நிலைமைகள் மாறிவிடவில்லை.

விருதுகளும் பரிசுகளும், கவுரவிப்புகளும் பாராட்டுதல்களும், திறமையாளர்களுக்கும் உண்மையான உழைப்பாளர்களுக்கும் உத்துதல்களாக இருக்கலாம். ஆனால், அவற்றுக்காக அவர்கள், உழைப்பதில்லை. அலை வந்து சேர்த்தாலும் சேராவிட்டாலும், திறமை உடையவர்கள், உழைப்பிலே இன்பம் காண்கிறவர்கள் - தங்களுக்கு உழைக்கும் சக்தி இருக்கிற வரையில் உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

உண்மைகளைத் தேடிக் காண வேண்டும் - கண்டறிந்த உண்மைகளை பிறர் அறியக் கூற வேண்டும் - என்பதற்காக அவர்கள் எழுதிக் கொண்டிருப்பார்கள். சமூகம் விழிப்படையவும், மக்கள் மேம்பாடு பெறவும், அவர்கள் தங்களது சிந்தனையையும் எழுத்தாற்றலையும் பயன்படுத்துவதில் சந்தோஷம் காண்பார்கள்.

பேரறிஞர் பெர்னாட்ஷா சொன்னார் - 'அறிவு வெளிச்சம் பரப்புவதற்காக நான் சிந்தனைத் தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தபடி எழுத்து உலகில் பிரவேசித்தேன். என் உயிர் உள்ளவரை, எனது உடலில் உழைக்கும் தெம்பு இருக்கிற வரை, அந்த ஒளிப்பந்தத்தைக் கீழே போடமாட்டேன். அதை உயரத் தூக்கிப் பிடித்தவாறு முன்னே முன்னே செல்வேன்.'