பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழு வள்ளல்கள்

5

புலவர்கள் போற்றுகிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து புகழ் பெற்றவர்கள். இவர்கள் யாவரும் சிறிய நாடுகளுக்குத் தலைவர்களாக இருந்தவர்கள்; குறுநில மன்னர்கள்; சில காலத்துக்கு முன்வரையில் சமீன்தார்கள் என்று பலர் இருந்தார்களே, அவர்களைப் போன்றவர்கள். சேர சோழ பாண்டியர்கள் என்னும் மூன்று அரசர்களும் முடியை அணியும் பெரிய மன்னர்கள். அவர்களை முடியுடை மன்னர்கள் என்று சொல்வது வழக்கம். அவர்களின் கீழ்ப் பல சிறு அரசர்களும் நாட்டுத் தலைவர்களும் அங்கங்கே இருந்தார்கள்; தனியாகவும் இருந்தார்கள். குறுநில மன்னர்கள், வேளிர் என்று அவர்களைச் சொல்வார்கள். ஏழு வள்ளல்களும் அத்தகைய சிறிய தலைவர்களே. அவர்களுடைய ஆட்சியில் பெரிய நாடுகள் இருக்கவில்லை; ஆனாலும் தம்முடைய கொடையினால் அவர்கள் புலவர்கள் உள்ளத்தைக் கவர்ந்தார்கள். பல பெரிய மன்னர்களும் சக்கரவர்த்திகளும் பெறாத பெரும் புகழை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.

அவர்கள் வரலாற்றை நாம் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. தம் நலனுக்காக வாழாமல் பிறருக்கு நலம் செய்வதற்காக வாழ்ந்த பெருமக்களைக் கடவுளுக்கு ஒப்பாக மதிப்பது தமிழ்நாடு. ஆதலின் அந்த வள்ளல்களுடைய புகழ்க்குரிய செயல்களைத் தெரிந்துகொள்வதனால் நாம் பெருமை அடையலாம். இனி ஒவ்வொருவராக நாம் தெரிந்துகொள்ளலாம்.