பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரி

9

வழிகள் இருந்தன. அன்று அவன் தேரிலே தான் சென்றான். தேர்ப்பாகன் அதை ஓட்டிச் சென்றான். பல இடங்களைப் பார்த்துவிட்டு மீண்டு வந்தான், அப்போது பிற்பகல் வேளை, கதிரவன் மேல் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். பறம்பு மலையின் அடிவாரத்தை நோக்கித் தேர் போய்க் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த வள்ளல், “தேரை நிறுத்து” என்று கூவினான். இரு பக்கங்களிலும் உள்ள இயற்கை வளத்தை அவன் பார்த்துக் கொண்டே வந்தான்; ஆதலின் தேர் மெல்லத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போது, தேரை நிறுத்து. என்று அவன் சொல்லவே பாகன் நிறுத்தினான்.

பாரிவள்ளல் தேரிலிருந்து இறங்கினான். அங்கே அருகில் ஒரு முல்லைக்கொடி வளர்ந்திருந்தது; இளங்கொடியாக இருந்தது. நிறைய அரும்பு கொத்துக் கொத்தாக விளங்கியது. மாலை நேரம் வந்தால் அத்தன அரும்புகளும் மலர்ந்து மணக்கும். தளதளவென்று வளர்ந்திருந்தது முல்லைக்கொடி. ஆனால் அது பற்றுக்கோடு ஒன்றும் இல்லாமல் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தளர்நடை பழகும் குழந்தை தட்டுத் தடுமாறி வந்து கீழே விழும் நிலையில் இருப்பதுபோல அது தளர்ந்து ஆடியது. குருடன் ஒருவன் கால் தளர்ந்து எதையேனும் பற்றிக் கொள்வதற்காக நாலு புறமும் வெறும் வெளியைக் கையால் துழாவுவது போல அது அசைந்தது. மெல்லிய காற்றில் அது திருப்பித் திருப்பி அசைந்தது. சிறிது காற்றுப் பலமாக அடித்தால் போதும்; அது ஒடிந்து விழுந்துவிடு மென்று தோன்றியது. அது அங்கும் இங்கும் அசைகிறதைப் பார்த்தால், வழியில் போகிறவர்களை