பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பேகன்

பஞ்சாமிர்தம் சாப்பிட்டவர்களுக்குப் பழனி மலை நினைவுககு வராமல் போகாது. பழனி மலையின்மேல் முருகன் கோயில் கொண்டிருக்கிறான். இப்போது பழனி என்ற பெயர் மலைக்கும் அதன் அடிவாரத்திலுள்ள ஊருக்கும் சேர்ந்து வழங்குகிறது. பழைய காலத்தில் மலைக்குப் பொதினி என்று பெயர்; ஊருக்கு ஆவிநன்குடி என்று பெயர். பொதினி என்பதே பிற்காலத்தில் பழனி என்று மாறிவிட்டது.

ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் சொன்னார்கள்; அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது.

அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். பாரியைப்போல அவனும் ஒரு வேள். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சொல்லுவார்கள். வையாவி ஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது பொருள்.

பேகன் சிறந்த கொடையாளி. புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல். யாழை வாசித்துப் பாடும் பாணர்கள் வருவார்கள். அவன் அரண்மனையில் பல நாள் தங்குவார்கள். அவர்களுடைய இசையின்பத்தை