பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேகன்

21

அவனும் மலையின்மேல் உள்ள முருகப் பெருமானை அடிக்கடி வழிபட்டுவந்தான். ஆவியர் குலத்துக்குப் பொதினி மலை முருகனே வழிபடு கடவுளாக விளங்கினான்.

ஒருநாள் பேகன் வெளியிலே காலாற உலாவி வரப் புறப்பட்டான். அவனுடன் இரண்டு மெய் காவலர் சென்றனர். அது கார் காலம். மேகம் வான் முழுதும் கப்பிக் கொண்டிருந்தது. குளிர் காற்று மெல்ல வீசியது. நெடுந்தூரம் சென்றவன் மீண்டு தன் இருப்பிடத்தை நாடி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கே ஓர் அழகிய காட்சியைக் கண்டான். மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் ஓர் அழகிய ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. அவன் அங்கே சற்று நின்றான். மயில் தன் இயல்புப்படி சர் சர் என்ற ஒலி உண்டாகும்படி தோகையை அசைத்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியது.

அவன் ஆடல் மகளிருக்குப் பல பரிசு தரும் வழக்கமுடையவன். இப்போது ஆடுகின்ற இந்த மயில் ஆடல் மகளிரைப் போலத்தான் ஒய்யாரமாக ஆடியது. ஆனல் சர் சர் என்று ஒலி வருவானேன்? அது குளிரால் நடுங்குவதனால்தான் அந்த ஒலி எழுகிறதென்று அவனுக்குத் தோன்றியது. உடனே அவன் உள்ளத்தில் இரக்க உணர்ச்சி உண்டாயிற்று. 'பாவம்! இதற்கு வாய் இருந்தால் தனக்குக் குளிர்கிறதென்பதை எடுத்துச் சொல்லும். இந்த ஒலியினால் புலப்படுத்துகிறது போலும்! என்ன அழகான மயில் இது நடுங்க நாம் பார்த்திருக்கலாமா?' என்று சிந்தனை செய்தான். அவன் முருக பக்தன் அல்லவா? மயில் முருகனுடைய வாகனம் ஆயிற்றே! அது குளிரால்