பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

எழு பெரு வள்ளல்கள்

சிறிது நேரம் சென்றது. பரணர் வந்தார். “இன்று ஒரு புதிய பாடல் பாடி வந்திருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே வந்தார். பேகன் சிறிதே தெளிவு பெற்று, “வாருங்கள், வாருங்கள்” என்றான். அவர் அமர்ந்தார். “அந்தப் பாடலை ஒரு பாணன் பாடியதாகப் பாடியிருக்கிறேன்” என்றார்.

“எங்கே சொல்லுங்கள், கேட்கலாம்.”

பாட்டை அவர் சொன்னார். அதுவும் கண்ணகியின் துயரத்தைச் சொல்வதாகவே இருந்தது.

“நீ இரங்காமல் இருப்பது கொடுமை. நாங்கள் யாழைச் சரிப்படுத்திக்கொண்டு செவ்வழிப் பண்ணிலே உன் காட்டின் பெருமையைப் பாடினோம். அப்போது நெய்தற் பூப்போன்ற கண்ணிலிருந்து நீரை வார விட்டுக்கொண்டு ஒருத்தி வந்தாள். நாங்கள் அப்பெருமாட்டியை வணங்கி, எங்கள் பெருமானுக்கு உறவினளோ?” என்று கேட்டோம். அவள் தன் மெல்லிய விரலால் கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள்; ‘நான் அவனுடைய உறவினள் அல்லள். அவனுக்கு என்னைப்போல வேறு ஒருத்தி உறவினளாகி விட்டாள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்' என்று சொன்னாள்.’ இவ்வாறு அந்தப் பாடல் கூறியது. அதைக் கேட்டுப் பேகன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்.

மறுபடியும் ஒரு பாட்டைப் பரணர் கூறினார். அதுவும் பாணன் பாடுவதாகவே இருந்தது. “மயில் நடுங்கு மென்று உள்ளம் இரங்கி மேலாடையை உதவிய பேகனே, நாங்கள் இப்போது உன்னை அணுகியதற்குக் காரணத்தைக் கேள். எங்களுக்குப் பசி இல்லை; தாங்க வேண்டிய குடும்பப் பாரமும் இல்லை. இங்கே வந்து இசை பாடிப் பெற விரும்பிய பரிசில் ஒன்று உண்டு.