பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

எழு பெரு வள்ளல்கள்

சொல்லியிருந்தார்கள். "அந்த மரம் காய்த்துப் பழுப்பது அரிது. காய்கள் பிஞ்சிலே உதிர்ந்துவிடும். ஒன்று இரண்டு காய்கள் முற்றி விளைந்தால் அவற்றை அமுதம்போலப் பாதுகாக்க வேண்டும். அந்த நெல்லிக்கனியை உண்டால் நெடுநாளைக்கு வாழலாம்" என்று சொன்னார்கள். "அத்தகைய மரத்தை நாம் பாதுகாப்பது நல்லது" என்று எண்ணி அதிகமான் அதற்குக் காவலாளரை அமைத்தான். பல காலமாகியும் அது காய்ப்பதாகவே தெரியவில்லை.

அந்த மரத்தில் இப்போது பிஞ்சுகள் தோன்றின. அதிகமான் அதைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தான். ஆனால் மருத்துவர்கள் சொன்னது போல் பிஞ்சுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வந்தன. "ஒரு காயாவது கனிந்தால் அரசருக்குப் பயன்படும். அவர் ஒருவர் நீடுழி வாழ்ந்தால் எத்தனையோ பேருக்கு நலம் உண்டாகும்" என்று சான்றோர் கூறினர்.

காலம் போய்க்கொண்டிருந்தது; பிஞ்சுகளும் உதிர்ந்து கொண்டே இருந்தன; சில, பெரிய பிஞ்சுகளாக முதிர்ந்தன; அவற்றிலும் சில உதிர்ந்தன. கடைசியில் சொல்லி வைத்தாற்போல ஒரே ஒரு காய் தான் மிஞ்சியது; பருத்தது; நன்றாகக் கனிந்தது.

ஒன்றாவது கிடைத்ததே என்று பெருமக்கள் உவகை அடைந்தனர். அந்தக் கனி அதிகமானுக்குத்தான் உரியது என்பதில் யாருக்கும் ஐயம் உண்டாகவில்லை. ஒரு நல்ல நாளில் அதைப் பறித்து இறைவன் திருமுன் வைத்து வணங்கி உண்ண வேண்டும் என்று ஏற்பாடு ஆகியிருந்தது.

அந்த நாள் வந்தது. கனியைப் பறித்து வந்து இறைவன் முன் வைத்து வழிபட்டார்கள். அதிகமான்