பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகமான்

43

வில்லிலிருந்து அம்புகள் சோனாமாரியாகப் பொழிந்தன. வாளைப் பலர் வீசினர்; வேலை ஓச்சினர். யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்று தெளிய முடியாமல் பல நாட்கள் போர் நிகழ்ந்தது. கடைசியில் அளவிலே மிகுதியாக இருந்த சேரன்படை முன்னேறியது. காரி மானத்துடன் போர் புரிந்தான். இறுதியில் அதிகமான் படை தோற்றது. ஒரு வீரன் எறிந்த வேல் மார்பிலே பாய அதிகமான் வீழ்ந்தான். அவன் வீழ்ச்சியைக் கண்டு சேரன் படையினர் ஆரவாரித்தார்கள். பெருஞ்சேரல் இரும்பொறை, போர்க்களத்தில் மாண்டு கிடந்த அதிகமானக் கண்டான். அவன் நெஞ்சு நடுங்கியது. அதிகமான் புகழைப் புலவர்கள் பாடிய பாடல்களினால் உணர்ந்தவனாதலின் அவனுக்கே அவன் உயிரற்ற உடலைப் பார்க்கப் பொறுக்கவில்லை.

புலவர்கள் பாட்டால் அழுது புலம்பினர்கள். அதிகமானை எரித்து அங்கே நடுகல்லை நட்டு வீரர்கள் வழிபட்டார்கள். அந்த நடுகல்லைத் தெய்வமாகப் பின் வந்தவர்கள் கும்பிட்டு வணங்கினார்கள்.

ஈகையினாலும் வீரத்தாலும் சிறந்து நின்ற அதிகமான் இன்றும் பழம் பாடல்களில் மாயாமல் நிலைத்து நிற்கிறான்.