பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காரி

45

சோழனுக்கோ, பாண்டியனுக்கோ, சேரனுக்கோ துணையாகச் சென்று போரிடுவான் காரி. போர் முடிவில் வென்ற மன்னன் அவனுக்குப் பல பல பரிசில்களைத் தருவான். பொன்னும் மணியும் அளிப்பான், ஊர் அளிப்பான்; நாடு அளிப்பான். வண்டி வண்டியாகத் தான் பெற்ற பண்டங்களை ஏற்றிக்கொண்டு வருவான் காரி. யானைகளும் குதிரைகளும் தேர்களும் அவனுக்குப் பரிசிலாக வரும்.

சில நாட்களில் அத்தனையையும் காரி வாரி வீசுவான். புலவர்களைக் கண்டால் அவனுக்குப் பேரன்பு. அவர்களுக்குக் காதிற் கடுக்கன் போட்டுப் பார்ப்பான். தேரைக் கொடுத்து ஏறச் செய்து கண் குளிரக் கண்டு பெருமகிழ்ச்சி அடைவான். இதனால் அவனுக்குத் தேர் வழங்கும் பெரு வள்ளல் என்ற பெயர் வந்துவிட்டது. ‘'தேர்வண் மலையன்" என்று புலவர்கள் பாடினார்கள்.

'பெரும் போரில் வீரத்தைக் காட்டிப் போராடிப் பெற்ற பொருளாயிற்றே! பல காலம் வைத்துக் கொண்டு வாழலாம்' என்று அவன் நினைப்பதில்லை. தோள் உள்ள அளவும் துயர் இல்லை, வாள் உள்ள அளவும் வறுமை இல்லை என்று, வந்தவற்றையெல் லாம் வாரி வாரி வழங்கினான்.

புலவர் பெருமான் கபிலர் அவனுடைய இயல்பைக் கேள்வியுற்றார். அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. பெற்ற பொருள்களின் மேல் பற்றில்லாமல் வழங்கும் அதிசயத்தைத் தம் கண்ணாலே பார்க்க வேண்டுமென்று வந்தார்; கண்ணாரக் கண்டு வியந்தார்.

அவனுடைய ஈகையை ஒரு பாட்டில் அழகாகப் பாடினர். "கழலைப் புனைந்த அடியை யுடைய காரியே,