பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஓரி

கொல்லி மலையைச் சார்ந்த நாட்டை ஆண்ட ஓரியைப் பற்றி முன்பே ஓரளவு அறிந்திருக்கிறோம் அல்லவா? அவன் வள்ளன்மையும் வீரமும் உடையவன். அவனை ஆதன் ஓரி யென்றும் சொல்வார்கள். வல்வில் ஓரி என்று அவனுக்கு ஒரு பெயர் வந்தது. ஓர் இலக்கை எய்தால் அந்த அம்பு பல பொருள்களைத் துளைத்துக்கொண்டு செல்லும்படி எய்வது அந்த வில்லாளியின் விறலைக் காட்டும். அவ்வாறு அம்பை எய்யும் வில்லை வல்வில் என்பர். இராமன் தாடகையின்மேல் எய்த அம்பு அவள் மார்பைத் துளைத்து மலையைத் துளைத்துப் பின்பு மரத்தைத் துளைத்து அப்பால் மண்ணுக்குள் சென்றது. அதனால் இராமனை வல்வில் இராமன் என்று சொல்வதுண்டு. அவ்வண்ணமே ஓரியும் அம்பு விடும் திறமையுடையவன். அவனுடைய வல்வில்லின் பெருமையை வன்பரணர் என்ற புலவர் பாடியிருக்கிறார். அந்தப் பாடலை, மலைச்சாரலில் ஓரி வேட்டையாடுவதைக் கண்ட பாணன் ஒருவன் சொல்லும் முறையிலே அமைத்திருக்கிறார்.

அந்தப் பாணன் தன் மனைவியாகிய விறலியோடும் பலவகை இசைக்கருவிகளை வாசிக்கும் சுற்றத் தோடும் தனக்கு உதவிபுரியும் கொடையாளிகளை நாடிப் போய்க் கொண்டிருந்தானாம். அப்போது அங்கே ஒரு வீரனைக் கண்டான். வீரன் மிகவும் வியக்கத் தக்க வேட்டையை ஆடிக் கொண்டிருந்தான். அவன்