பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழு வள்ளல்கள்

3

இவ்வாறு ஆகாமல் பிறருக்கு அளிப்பதிலே இன்பங் கண்ட பெருமக்களை உலகம் என்றும் எண்ணி வாழ்த்தும்படி செய்தார்கள் புலவர்கள். வள்ளல்களிடம் நலம் பெற்றவர்கள் பல வகையினராக இருந்தாலும், மற்றவர்கள் யாவரும் தம்முடைய வாழ்த்தையும் நன்றியறிவையும் சில காலம் சிலர் காதில் போட்டிருப்பார்கள். புலவர்களோ வள்ளல்களின் சிறப்பையும் அவர்கள் செயல்களையும் விரிவாகப் பல செய்யுட்களில் அமைத்துப் பாராட்டினார்கள். அதனால் அந்த வள்ளல்கள் மறைந்தாலும், அவர்களால் நலம் பெற்ற மக்கள் மறைந்தாலும், அவர்கள் பெற்ற பொருள்கள் அழிந்தாலும் வள்ளல்களின் புகழ் மாய்வதில்லை. புலவர்களுக்கு ஈந்த ஈகை வள்ளல்களின் பெயரை மங்காமல் வைத்திருக்கிறது. அவர்களின் வரலாற்றைப் புலப்படுத்தும் பாடல்கள் இலக்கியமாக வழங்கி வருகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த மக்களைப் பற்றிய செய்திகளை அந்தக் காலத்தில் உண்டான நூல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. அந்த நூல்களை இப்போது சங்க நூல்கள் என்று பெயரிட்டு வழங்குகிறோம். மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆதரவு பெற்றுப் பல புலவர்கள் ஒன்றுகூடித் தமிழ் ஆராய்ச்சி செய்தார்கள். புதிய நூல்களை இயற்றினார்கள். தமிழ் நாட்டில் யாரேனும் புதிய நூல் இயற்றினால் அந்தப் புலவர்களிடம் வந்து காட்டி நன்றாக இருந்தால் மதிப்புப் பெற்றார்கள். இத்தகைய செயல்களைப் புலவர்கள் கூடிச் செய்த இடமே தமிழ்ச் சங்கம். பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து சங்கம் நடந்து வந்தது.