பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32. மலர்களால் பெண்களை மறைத்த கண்ணன்


கண்ணன் ஆயர்பாடியில் செய்த திருவிளையாடல்களைப் பலரும் அறிவர். பல காவியங்களிலும் அவை இடம் பெற்றுள்ளன.

காவியங்களில் இடம் பெறாமல், செவிவழிச் செய்தியாக ஒரு திருவிளையாடல் நெடுங்காலம் வழங்கி வந்துள்ளது. அதனை அகநானூறு என்ற சங்க நூல் மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது.

“வடாது வண்புனல் தொழுநை வார்புனல்
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம்செல மிதித்த மால்” (அகம்:59)

என்பதே அகநானூறு கூறும் செய்தி

“ஆயர் பெண்கள் குளியா நின்றார்களாக, அவர், இட்டு வைத்த துகில் எல்லாம் பின்னை எடுத்துக் கொண்டு கண்ணன் குருந்தமரத்து ஏறினாராக, அவ்வளவில் நம்பி மூத்தபிரான் பலராமன் வந்தாராக, அவர்க்கு ஒரு காலத்தே கூட மறைவதற்கு மற்றொரு வழியின்மையின் ஏறி நின்ற குருந்த மரத்துக் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தார். அதற்குள்ளே அடங்கி, (ஆய்ச்சியர்) மறைவாராக, அவர் போமளவும் தானையாக உடுக்கத் தாழ்த்தார்”

என்பது இப்பகுதிக்கு உரிய புழைய உரை

கண்ணன் ஆய்ச்சியர் துகிலை எடுத்துக் குருந்தமரம் ஏறினான். அப்போது எதிர்பாராமல், பலராமர் அவ்வழியே வந்து விட்டார். அதனால் கண்ணன், தன் குறும்பு வெளிப்பட்டு விடக்கூடாதே என்று அஞ்சினான். துகிலை மீண்டும் தந்து அணிந்து கொள்ளச் செய்ய நேரம் இல்லை. ஆதலால் தான் ஏறிய குருந்த மரத்தை நீருடன் தாழும்படி காலால் மிதித்து வளைத்தான். மரக்கிளைகள் வளைத்து நீராடிய பெண்களை மறைத்துக் கொண்டது.