பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

த. கோவேந்தன்


மயக்கினாள் என்று பழமொழி நானூறு என்ற பழைய நூல் கூறுகின்றது. அதனால் “சால்பினைச் சால்பு அறுக்குமாறு” என்ற பழமொழியே தோன்றி வழங்கியதாக அறிகின்றோம். இதே வரலாறு சிலம்பிலும் உள்ளது.

கண்ணன் - நப்பின்னை வரலாறு. தமிழ் நாட்டில் நாடகமாக நடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்குச் சிலம்பு சான்று தருகின்றது.

“குலம் நினையல் நம்பி!
நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரை நப்பின்னை
இலவலர் வாய் இன்னமிர்தம் எய்தினான் அன்றே”

என்பது சிந்தாமணிப் பகுதி.

நிலமகட்குக் கேள்வன் - அரசனாகிய கண்ணன்
நீள்நிரை நப்பின்னை பெருந்திரளான பசுக்களைக்

கொண்ட ஆயர்குலத்து நப்பின்னை.

இருவரும் மணம் செய்து கொண்டனர் என்பது. கருத்து. இந்த நப்பின்னை வரலாறு ஆழ்வார்கள் பாடல்களில் பரக்க இடம்பெறுகின்றது. பூமிதேவி சீதேவி ஆகிய இருவருடன் சேர்ந்து திருமாலுக்கு மூன்றாவது தேவியாக இடம் பெறுகின்றாள்.

தமிழ் நாட்டில் மட்டும் வழங்கி வந்த நப்பின்னை வரலாற்றை நெல்லிநகர் வரதராச ஐயங்கார் தம் காவியத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார். நப்பின்னைப் படலம் என அப்பகுதிக்குப் பெயரிட்டு, யசோதையின் தமையன் கும்பகன் மகள் நப்பின்னை என்று குறிப்பிட்டுள்ளார். கண்ணன் ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னையை மணந்து கொண்டானாம்.

நப்பின்னை வரலாறு போலவே வள்ளி தேவியின் வரலாறும் தமிழ் நாட்டுக்கே உரியது.