பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

11



6. எச்சில் இலை எடுத்த இறைவன்


பாண்டவர்கள் இராசசூய யாகம் செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்திருந்தனர்.

“சபையில் முதலில் பூசிக்கத் தகுதியுடையவர் யார்?” என்று ஒரு வினா எழுந்தது.

பலகலை வல்லவனான சகாதேவன் எழுந்து, “ஆன்றோர்களே அரசர்களே”

"இவ்வுலகம் எவருடைய வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூசை பெறத் தகுதியுடையவன் ஆவான்"

“அத்தகையவன் நம்மிடையேயுள்ள கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர். அவருக்கே பூசை செய்வோம். அப்படிச் செய்தால், எல்லா உயிர்களுக்கும் செய்ததாகும்” என்றான்.

அவன் சொல்லியதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சிசுபாலன் என்பவன் மட்டும் எதிர்த்தான்.

அவன் எதிர்ப்பைக் கண்டு சினந்த அரசர் பலர் அவனைக் கொல்ல எழுந்தனர்.

நிலைமை கொந்தளிப்பானதை அறிந்த கண்ணன், தன் சக்கரத்தால் சிசுபாலனை அழித்தார்.

பின்னர், சகாதேவன் சொல்லியபடியே கண்ணனுக்கு முதல் பூசை செய்தனர்.

கண்ணன் ஓர் இரத்தின சிம்மாதனத்தில் அமர்ந்த காட்சி அனைவருடைய கண்களுக்கும் விருந்தானது.

இராசசூய வேள்வியின் பிறி செயல்களில் அனைவரும் ஈடுபட்டிருந்தனர்.