பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

19



“அவ்வாறு வறட்டுக் கெளரவம் கருதாமல் இருந்திருந்தால், நமக்கு இந்தக் கதி நேருமாறு கண்ணன் விட்டிருக்க மாட்டான்.

“திரெளபதியோ இராச சன்பயில் அவமானப்பட்டபோது, கெளரவத்தையோ மான அபிமானத்தையோ எண்ணவில்லை. உடுக்கை இழந்தவளின் கை அதைப் பற்றவில்லை. அதற்கு மாறாக அவள் கைகள் தலைக்குமேல் குவிந்தன. மானம் போவதால், நாக்குச் செயல் இழக்கவில்லை. “கோவிந்தா! கோவிந்தா!” என்று கதறினாள். அவமானத் துயரத்தால் கண்கள் வறளவில்லை. கண்ணீரை ஆறுபோலக் கொட்டின. என்னால் முடியும் என்ற இறுமாப்பு உள்ள வரையிலும் கண்ணன் உதவ, ஓடிவர மாட்டான். என் செயலால் இனி ஏதும் இல்லை. இனி எல்லாம் உன் செயலே என்று தஞ்சமடைந்து விட்டால், அவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பது அவன் பொறுப்பாகி விடுகின்றது. அதனல்தான் திரெளபதிக்குப் புடவை சுரந்தான்” என்றான் ஞானி சகாதேவன்.

“ஆம்!ஆம்! நாம்தான் மான உணர்வினால் தவறு செய்தோம். அதன் பலனை அனுபவிக்கின்றோம்” என்று ஒருமித்த குரலில் அனைவரும் கூறிக் கண்ணன் திருவடி நண்ணும் மனமுடையவர் ஆயினர்.