பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

21



"எவ்வளவு செல்வச் செழிப்பு இருந்தால், இப்படி நடக்கும்?" என்று மருட்கை எய்தி கண்ணனைப் பின் தொடர்ந்தான் தருமன்.

மாவலியிடம் தருமனை அழைத்துச் சென்றான் கண்ணன்.

"மாவலி மன்னா! பாதல நாட்டில் நீ பெருங்கொடை வள்ளல். உன் புகழ் பல உலகங்களிலும் பரவியுள்ளது. இதோ என்னுடன் வந்துள்ளாரே! தருமர். இவர் பூவுலகின் ஏக சக்கராதிபதி. கொடையில் உனக்கு ஒப்பானவர். நாடோறும் பல்லாயிரம் பேருக்கு இல்லையென்னாமல் அன்னமும் சொன்னமும் தருகின்றார்!" என்று தருமன் புகழை விரித்தான் கண்ணன்.

கண்ணன் பேச்சைக் கேட்ட மாவலியின் முகம் சினத்தால் சிவந்தது. வெறுப்பால் விளர்த்தது.

"இந்தப் பாவியை இங்கு ஏன் அழைத்து வந்தாய்! இவன் முகத்தில் விழிப்பதே பாவம். உடனே அழைத்துச் சென்றுவிடு!" என்று சீறினான் மாவலி.

தருமனுக்கு ஒன்றும் புரியவில்லை. மாவலி ஏன் தன்னை வெறுக்க வேண்டும்? தான் செய்த தவறு என்ன? என்று எண்ணி நாணி நின்றான்.

"இந்தப் பாவி நேர்மையாக ஆட்சி செய்தால் நாட்டில் ஏழைகள் இருப்பரா? இவன் போடும் அன்னத்துக்கும் தரும் சொன்னத்துக்கும் இவனைத் தேடி வருவரா? இவனுக்கு நாட்டை ஆளத் தெரியவில்லை என்பது இதனால் விளங்கவில்லையா?

“வரிசைதப்பிய மன்னன் முகத்தில் விழிப்பது பாவந்தானே!" என்று மாவலியே தருமனின் தவற்றைச் சுட்டிக் காட்டினான்.

தருமன் அங்கு நிற்பானா? கண்ணனுக்கு முன்பு நடையைக் கட்டினான்.

பல்லாயிரம் பேருக்கு அன்னமும் சொன்னமும் தரும் நமக்கு நிகரான அரசர் உண்டா? என்று தருமனிடம் தோன்றிய கருவம் பழங்கதையாய்ப் போனது.