பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

த. கோவேந்தன்


வலியக் கிடைத்துள்ளது. எங்களிடம் உனக்குக் காணிக்கையாகத் தர விலையுயர்ந்த பொருள் யாதொன்றும் இல்லை. உள்ளது எதுவாயினும் கேட்டுப் பெற்றுக் கொள்க!” என்று தந்தை மன்றாடினான்.

“ஐயா! உன்னிடம் விலையுயர்ந்த பொருள் ஏதும் இல்லையென்று பொய் சொல்கின்றாயே! உலகமே விலை பெறக்கூடிய ஒன்று உன்னிடம் உள்ளது. அதனைக் கேட்டால் தருவாயா?” என்றான் கண்ணன்.

“எங்களிடமா! விலையுயர்ந்த பொருளா! ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே! இருந்தால், அதைத் தருகின்றோம். அப்பொருள் எது என்று நீயே கூறவேண்டும்!” என்றான் தந்தை.

“இதோ இருக்கின்றானே! உன் மகன்! இவன் உன்னிடம் உள்ள ஒப்பற்ற செல்வம் (நன்கலம்) அல்லவா? அவனைக் கொடு!" என்றான் கண்ணன்,

“என்னிடமுள்ளவை அனைத்தும் உனக்குரியனவே! என்மகனை இப்போதே தாரை வார்த்துத் தந்து விடுகின்றேன்” என்று மகனை அழைத்துக் கண்ணன்முன் நிறுத்தினான்.

“ஐயா! இப்படியே உன் மகனைத் தரலாகாது. நீயும் உன் மனைவியும் உச்சியிலிருந்து சரிபாதியாக ரம்பத்தால் அறுத்து வலப்பாதியை எனக்குத் தருதல் வேண்டும்” என்றான் கண்ணன்.

“ஆனால் அறுக்கும் போது, யார் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது” என்று ஒரு நிபந்தனையும் விதித்தான்.

கணவனும் மனைவியும் கணங்கூடத் தாமதம் செய்யாமல், ரம்பம் கொணர்ந்தனர். அறுபடத் தோதாக மகன், தானாகவே அவர்கள் நடுவே வந்து அமர்ந்து கொண்டான்.

ரம்பம் இயங்கியது. மகன் தலை அறுபட்டது. கணவனும் மனைவியும் சிறிதுகூடக் கலங்கவில்லை. கலங்கினால் தானே கண்ணீர் வரும். கண்ணீரே வரவில்லை.