பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


மகாபாரதக் கதைகளை ஏட்டில் படித்தவர்கள் பலர். ஆனால் அக்கதைகளை ஏட்டில் படிக்காதவர்களிடையே பல வேறுபட்ட கதைகள் வழக்கில் உள்ளன. அவை ஏட்டில் இடம்பெறாத நாட்டுப்புறக் கதைகள். செவிவழிக் கதைகளாக வழங்கப்பெறும் அக்கதைகள் மூலம் பல அறநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. மனிதர்களின் மனங்களைப் பக்குவப்படுத்துவதற்காகவே கதைகள் பிறந்தன. அவை ஏட்டு வடிவக் கதைகளாக இருந்தாலும் செவிவழிக் கதைகளாக இருந்தாலும் நன்மை பயப்பவைகளே தவிர தீமை விளைவிப்பன அல்ல.

அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றிலிருந்த கருவை அழிப்பதற்காக அசுவத்தாமன் பிரமசிரசு என்ற அம்பை ஏவினான். கண்ணன் அருளால் உத்தரையின் கரு காக்கப்பட்டது. இருப்பினும் கருவிலுள்ள குழந்தையைக் கருகச் செய்தது. கருகிய குழந்தை கரிக்கட்டையாக இறந்து பிறந்தது. பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்தவர் தொட்டால்தான் கரிக்கொட்டை உயிர்பெறும். முனிவர்கள் பலர் தொட்டனர். உயிர் பெறவில்லை. கடைசியில் கண்ணன் தொட்டான் உயிர்பெற்றது. கேபிகாஸ்திரிகளுடன் கொஞ்சிவிளையாடிய கண்ணனா பிரமச்சரிய விரதம் காத்தவன் என்ற வினா எழுகிறது. ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதை ஒன்று வினா எழுப்பி விளக்கமும் அளிக்கிறது.

பாண்டவர்கள் இராசசூய யாகம் செய்தபோது தலைமையிடத்திலிருந்த கண்ணனைக் காணாமல் தேடினர். அப்போது கண்ணன் விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளிக் கொட்டும் பணியில் ஈடுபட்டிருந்தான். உலகம் பூஜிக்கும் கண்ணனுக்கு இப்பணி தேவையா என்ற கேள்வி எழுகிறது. கேள்வி எழுப்பி ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதை ஒன்று பதிலும் தருகிறது.

மகாபாரதப்போர் நடக்கும்போது பகலில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்த கண்ணன் இரவில் குதிரைகளுக்கு உணவூட்டிப் பணிவிடை செய்தான். குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமாஎன்றகேள்வியை அர்ச்சுனன் மூலம்எழுப்பிவிளக்கமளிக்கிறது ஏட்டில் இல்லாத இன்னொரு கதை.

பஞ்சபாண்டவர்களைச் சகுனி மூலம் சூதாடி வென்றான் துரியோதனன். அந்த நேரத்தில் சகுனியை வெல்லக் கண்ணனை