பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

49



“உம் வழக்கில் தீர்ப்பு உரைப்பதற்குமுன், வீமன் பிடிபட்ட இடத்தைப் பார்க்க வேண்டும்” என்றான் தருமன்.

உடனே தருமனும் அமைச்சரும் வீமனும் புருடமிருகமும் அந்த இடத்தை அடைந்தனர்.

இடத்தை ஆராய்ந்த தருமன் தன் தீர்ப்பை வழங்கினான். “புருடமிருகமே! உன் பிரதிவாதி என் தம்பி என்பதற்காகப் பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்கமாட்டேன். உன் காட்டில் வீமன் உடலின் ஒரு பகுதி இருந்துள்ளது. மறுபகுதி எங்கள் நாட்டில் இருந்துள்ளது. ஆதலால், உன் காட்டில் இருந்த வீமன் உடலில் சரி பாதியை நீ உண்ணலாம்” என்றான் தருமன்.

தண்டனை பெறுபவன் தம்பி என்று கூடப் பாராமல், நீதி வழுவாமல் தீர்ப்பு வழங்கிய தருமனைப் புருடமிருகம் பாராட்டியது.

தீர்ப்பின்படி வீமன் உடலின் பாதியை உண்ணத் தொடங்கியது.

அப்போது சகாதேவன் முன்னே வந்தான். பாண்டவரில், அனைத்து நீதி நூல்களும் அறிந்தவன் சகாதேவன். பகை என்று வெறுப்பதும் உறவு என்று விரும்புவதும் செய்யாத சமத்துவ அறிஞன்.

அத்தகைய சகாதேவன், தன் அண்ணனை நோக்கி, “அண்ணா! நீதி தவறாமல் தீர்ப்பு வழங்கினீர்கள். ஆனால் அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்று தாங்கள் நிர்ணயமாகக் கூறவில்லையே” என்றான்.

“தம்பி சகாதேவா அந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவது எப்படி என்பது சகலகலை வல்லவனாகிய உனக்குத்தான் நன்கு தெரியும். அதனை நீயே சொல்” என்றான் தருமன்.

“அண்ணா! புருடமிருகம் வீமன் உடலில் பாதி உண்னும் போது மறுபாதியில் சிறு இரணமோ வலியோ ஏற்படலாகாது. அந்த வகையில் புருடமிருகம் உண்ணட்டும்” என்றான் சகாதேவன்.