பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

51



20. கண்ணனின் உண்மை வடிவம்

மாபாரதப் போர் வாராமல் தடுக்க வழி என்ன என்று சகாதேவனைக் கேட்டான் கண்ணன்.

"நீ பாரத அமரில் யாவரையும் நீறுஆக்கிப்

பூ பாரம் தீர்க்கப் புகுந்தாய்! புயல்வண்ணா!

கோபாலா! போர்ஏறே! கோவிந்தா! நீஅன்றிப்

மா பாரம் தீர்க்க மற்றார்கொல் வல்லாரே"


என்று கூறத் தொடங்கிய சகாதேவன், "கண்ணா! நேராகக் கையால் பிடித்து நின்னை நான் கட்டுவனேல், வாராமல் காக்கலாம் மாபாரதம்" என்று முடித்தான்.

"சகாதேவா! என்ன கூறுவாய்! நீ எதைச் செய்ய முடிந்தாலும், எல்லாம் வல்ல இறைவனாகிய என்னைக் கட்ட இயலுமா?" என்றான் கண்ணன்.

"உன்னை நீ தானும் உணராதவனான கண்ணா! உன் உண்மை உருவத்தைக் காட்டு நான் கட்டுகின்றேனா? இல்லையா? பார்!" என்றான்.

உடனே கண்ணன், தான் ஒருவனே பதினாறு ஆயிரம் வடிவு கொண்டு சகாதேவன் எதிரில் நின்றான். "இத்தனை வடிவங்களில் என் மூல வடிவம் கண்டு கட்டு பார்ப்போம்" என்றான் கண்ணன்.

பெருஞானியாகிய சகாதேவன், தன் பக்தித் திறத்தில் மூல வடிவை அடையாளம் கண்டு அதனைத் தன்மனத்தினால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

சகாதேவன் மனத்தின் இறுக்கம் பொறுக்க இயலாமல் கண்ணன் "சகாதேவா! நீ வென்றுவிட்டாய்! நீ மனத்தால் கட்டிய இறுக்கம் தாங்க இயலவில்லை! என்னை விட்டு விடு!" என்று கெஞ்சினான் எம்பெருமான்.