பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

த. கோவேந்தன்



30. கண்ணனை காட்டிக் கொடுத்த மணிகள்


தீராத விளையாட்டுப் பிள்ளை எனப் பெயர் பெற்றவன் கண்ணன். நவநீதசேரன், வெண்ணெய்த்திருடன் என்ற பட்டப் பெயர்களும் உண்டு.

ஆயர் வீடுகளில் வெண்ணெயை உறியில் தான் வைப்பார்கள். வீடுகள் என்பது சிறு குடிசைகள் தாம். கதவு வெறும் படல் தான். ஆயரில் ஆண்கள் காலிகளை மேய்க்கச் சென்று விடுவர்.

ஆய்ப்பெண்கள், பால், மோர் விற்கப் போய்விடுவர். வீட்டில் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

இந்த நேரத்துக்காகக் காத்திருப்பான் கண்ணன். படலைத் தள்ளி உள்ளே புகுந்து, உறியில் உள்ள வெண்ணெய் முழுவதும் திருடி உண்டுவிடுவான்.

ஆய்ச்சியர் வந்து கேட்டால், நான் ஒன்றும் அறியேன் என்று சொல்லி விடுவான்.

வெண்ணெய் திருடு போகாமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆய்ச்சியர் யோசித்தனர். கண்னன்தான் திருடுகின்றான் என்பதும் தெரியும் ஆயினும் கையும் களவுமாக அல்லவா பிடிக்க வேண்டும்

வீட்டிலுள்ள உறிகளில் மணிகளைக் கட்டி வைக்க வேண்டும். கண்ணன் திருடும்போது, மணி ஓசை எழுப்பும், அந்த ஒலி கேட்டு ஓடிச் சென்று கண்ணனைக் கையும் வெண்ணெயுமாகப் பிடிக்க வேண்டும் என்று சிந்தித்தனர்.

சிந்தித்ததை உடனே செயல்படுத்தினர் ஒவ்வொரு வீட்டிலும் உறிதோறும் வெண்கலமணி கட்டப்பட்டது.