பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முன்னோட்டம்

வானுயர வளர்ந்து நிற்கும் இமயம்
பிறக்கு முன்னே பிறந்த பழங்குடி
இந்து மாக் கடல் விழுங்கு முன்னே
பஃறுளி ஆற்றுடன் பன் மலை அடுக்கம்
தழைத்திருந்த லெமூரிய மாநிலப் பரப்பில்
வாழ்ந்திருந்த மனித குலத்தின் முதற்பதிப்பு
சிந்து வெளியில் கங்கைக் கரையில்
நைலின் ஓரத்தில் வால்காவின் தீரத்தில்
செழித்தெழுந்த கலைகளுக்குத் தாலேலோ பாடிய
காவிரியின் மடியில் குடியிருந்த மூத்தகுடி
தமிழ்க் குலம் என்று தலை நிமிர்ந்து சொல்வேன்

மிருக நிலையில் இருந்து மேம்பட்ட மானிடன்
கண்ணால் குறித்து கையால் உரைத்த
காலம் தெளிந்து பையப் பைய
நாவால் ஒலித்து மொழியாய் வளர்த்த
முதல்மகன் தமிழ் மகன் என்றால் சரித்திரம் மறுக்குமோ?

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றான்.
முன்னாளில் அவன் வாழ்ந்து காட்டிய வழி முறையை
வள்ளுவர் வகுத்துக் காட்டினார் திருக்குறளாக

பின்னாளில் பழந்தமிழன் பாமரன் ஆனான்