பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12
திருவேற்காடு

பொற்கோட்டு இமவான் மகளே புவனேசுவரி
அம்பிகே, துர்க்கா அங்காள பரமேசுவரி
சங்கரி நந்தினி சவுந்தரி ராஜேஸ்வரி
ஓம் சக்தி பராசக்தி உமா மகேசுவரி
கங்கா பவானி கௌரி கௌமாரி
வான்மாரி பொய்ப்பினும் வரன்மாரி பொய்க்காத
கருமாரித் தாயே காரணத்தின் காரணியே
ஆரணத்தின் பெரும் பொருளே நாரணர்க்கு இளையவனோ
நல்ல தமிழ்ச் சுவை அமுதே நாராயணி
ஓங்கார வடிவே ஆங்கார வல்லி
ஊங்கார தொனியே ரீங்கார வல்லி
கதிராய் நிலவாய் காய்கின்ற ஒளிச்சுடரே
கனலாய் புனலாய் காற்றாய் வெளியாய்
மணலாய் மலர்ந்த சரா சரமே
அம்மே நின் பெருமை பேசவல்லேன் அல்லேன்
சிரித்தே புரமெரித்த சிவனார் நினது
பேரழகு மயக்கத்தில் பித்தன் ஆகி
எலும்பும் அரவும் எருக்கும் அணிந்து
சுடலையில் நடம் புரியும் டேத்தன் ஆனால்
அழகின் சிரிப்பே அறிவின் விளக்கே
அன்பின் பெருக்கே அருளொழுகும் பெண்மையே
அம்மையே நின்னை நான் எவ்வாறு பாடுவேன்
வெற்றி வெல்போர்க் கொற்றவையே நற்றமிழே
நெற்றிக் கண்ணனுக்கு இனிய நேரிழையே
வெற்றி மேல் வெற்றிதர வேண்டும் அம்மா
மூத்த பிள்ளைக்கு மூலாதாரம் கொடுத்தாய்
இளைய நம்பிக்கு வடிவேல் கொடுத்தாய்
காழியர் பிள்ளைக்கு ஞானப்பால் கொடுத்தாய்
கம்பனுக்கு கன்னித் தமிழையே கொடுத்தாய்
அம்மையே இந்த உலகாளப் பொருளும்
அந்த உலகாள அருளும் தர வேண்டுகிறேன்
திருவேற்காடு அமர்ந்தவளே செங்கமலவல்லி

தாயே உமையே மகாமாயே சரணம்.