பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

99

“நான் அப்பாவிடம் சொல்லி உனக்கு வேலை போட்டுத் தருகிறேன். இன்றுபோய் நாளை வா!”

“சரி, இன்று இங்குள்ளதை அபகரித்துக் கொண்டு நாளைக்கு நல்லவனாகத் திரும்பி வருகிறேன்.”

“என்ன திமிர் உனக்கு?... கேலி வேறு பேசுகிறாயா?”

“இல்லை, உண்மை பேசுகிறேன்!”

“எங்கள் சொத்தைக் கொள்ளையடிப்பதில் நீ எவ்வளவு சந்தோஷப்படுகிறாயோ - அதுபோல நான் உங்கள் சொத்தைக் கொள்ளையடிந்தால், உன்னுடைய மனம் எவ்வளவு பாடுபடும்?” என்று நான் கேட்டது தான் தாமதம், உடனே அவன் என்ன செய்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அந்தத் திருடன் என்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். விழுந்துமுடிந்ததும் எழுந்தான்; எழுந்து முடிந்ததும் அவன் பேசலானான்:

“இத்தகைய மகத்தான உண்மையை இதுவரை எனக்கு யாருமே சொல்லித்தரவில்லை. உங்கள் போதனைக்குப் பெரிதும் நன்றி! நான் இனி திருட மாட்டேன்!” என்று சொல்லிப் பிரிந்தான்.

ஒன்பதாம் அதிசயமாகத் தோன்றுகின்றதல்லவா?