பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

பூவை எஸ். ஆறுமுகம்


மலையுச்சியில் அக் கனி இருக்கக் கண்டான்.' பெறுதற்கரிய-ஆனால் பெற்றாலும் கிட்டுதற்கரிய அத்துணைச் சிறப்புப் பெற்ற அந்த நெல்லிக் கனியின் அருமை பெருமைகளைக் கேள்விப்பட்ட அவன், கையில் விளங்கிய கனியுடன் மேற்படி கனியினைப் பற்றித் தான் கேட்டுணர்ந்த விவரங்களை யெல்லாம் நினைவு கூர்ந்தவாறு இருந்தான்.

அக்கனியின் சிறப்பும் மகிமையும் என்ன வென்று தெரியுமா?

உண்டாரைப் பிணியின்றி, நெடுங்காலம் வாழச் செய்யும் பெற்றி கொண்டது அக்கனி.

இத்துணை பெருமை கொண்ட அக்கனியை அவன் யாதொரு விக்கினமும் இன்றிப் பறித்து மீண்டான். அதுவே அவனது பெரும் வெற்றி தானே!-அத்தகைய வெற்றிக்குச் சின்னம் போலத் தோன்றிக்கொண்டேயிருந்தது அந்நெல்லிக்களி.

“இக்கனியை என்ன செய்வது?’ என்ற ஒரு விசித்திரக் கேள்வியை அவன் தன்னுள் எழுப்பிக் கொண்டான். உரிய விடையையும் அவனது வள்ளல் உள்ளம் சொல்லிக் காட்டியது. அவ் விடை ஈந்த அளவில்லாத ஆனந்தத்தின் திளைப்பில் அரண்மனையில் வந்திறங்கினான். வேட்டையாடிய களைப்பைப் போக்கக் கூட அவனுக்கு எண்ணமில்லை.