பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

சர்க்கஸ் கோமாளி அதன் கழுத்தில் ஒரு முறுக்கு மாலையைப் போட்டு, அதைத் தட்டிக் கொடுத்தான். ஒரே கைதட்டல்; சிரிப்பு.

சர்க்கஸ் மிருகங்கள் எல்லாம் அதைப் பார்த்துப் பொறாமை கொண்டன. தாமும் அப்படிச் செய்து காட்ட வேண்டும் என்று வட்டத்திற்குள் நுழைந்தன.

யானை தன் பின் கால்களை ஒன்றோடொன்று இடிக்கும்படி செய்து பார்த்து முடியாமல் தட்டுத்தடுமாறித் 'தொப்'பென்று தரையில் விழுந்தது. அதைக் கண்டு எல்லோரும் நகைத்தார்கள்.

குதிரை, நாய், குரங்கு - ஒவ்வொன்றும் அந்த வித்தையைச் செய்து பார்த்து மண்ணைக் கவ்வின.

இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சர்க்கஸ் மிருகங்களுக்கெல்லாம் அவமானமாய்ப் போய் விட்டது. அந்தக் கழுதையைக் கேவலமாக நினைத்ததை எண்ணி அவை வெட்கமடைந்தன; தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டன.

கடக்கிட்டி முடக்கிட்டி கம்பீரமாகத் தலையை நிமிர்த்தி நடந்து, சத்திரத்திற்கே வந்துவிட்டது. யாரும் அதைத் தடை செய்யவில்லை. வழியில் அது தன் கழுத்தில் கோமாளி போட்ட மாலையிலிருந்து முறுக்குகளைத் தின்றுகொண்டே நடந்தது.