பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

"இந்தக் கிழவனுடைய குடிசையில் என்ன இருக்கப்போகிறது? இவனோ விறகு வெட்டிப் பிழைக்கிறவன்" என்று இரண்டாம் திருடன் சந்தேகத்தோடு கேட்டான்.

"அண்ணே, இந்தக் கிழவன் தினமும் குறைந்தது நான்கு ரூபாய்க்கு விறகு விற்கிறான். இவனுக்குச் செலவும் அதிகம் இருக்காது; அரிசி பருப்பு வாங்கத் தினமும் இவனுக்கு இரண்டு ரூபாய்க்கு மேல் செலவில்லை. அதனால், விறகு விற்றுச் சம்பாதித்த பணத்தையெல்லாம் அவன் குடிசையில் எங்காவது வைத்திருப்பான். அதை நாம் இரண்டு பேரும் சுலபமாகத் தட்டிக்கொள்ளலாம்" என்று ஆசை காட்டினான் முதலில் பேசிய திருடன்.

மற்றவனுக்கும் பணம் சுலபமாகக் கிடைக்கும் என்றவுடன் ஆசை வந்துவிட்டது.

"ஆமாம் தம்பி, இந்தக் கிழவனைச் சமாளிக்க நாம் இரண்டு பேருமே போதும். ஒரு தட்டுத் தட்டினால் கிழவன் கீழே விழுந்து விடுவான். நம் கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டால் நமக்குக் கால் பங்குதானே வரும்."

"அதனால்தான் இதை நாம் மட்டும் ரகசியமாகச் செய்ய வேண்டும். அடுத்து வரும் அமாவாசை நல்ல இருட்டாக இருக்கும். நடுச் சாமத்திலே கிழவனுடைய குடிசைக்குள் புகுந்துவிடலாம்."