பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

மாதிரியான விலங்குபோல் இருக்கிறதே! இதன் பெயர் என்னவாக இருக்கும்? இதன் மேல் பாய்ந்தால் ஒருவேளை ஆபத்தாக முடியுமோ?’ என்று புலி யோசித்தது. எதற்கும் அருகே சென்று பேசிப் பார்ப்போம் என்று அது மெதுவாக நகர்ந்து வந்தது. சிவப்புச் சாயமும் பச்சைச் சாயமும் கடக்கிட்டி முடக்கிட்டியைப் புதியதோர் விலங்காகச் செய்திருந்தன. சற்று அருகில் வந்ததும், “உன் பெயர் என்ன?” என்று புலி தயக்கத்தோடு கழுதையிடம் கேட்டது.

“கடக்கிட்டி முடக்கிட்டி” என்று தைரியமாகக் கழுதை பதில் சொல்லிற்று.

பெயரைக் கேட்டதும் புலிக்கு மேலும் சந்தேகம் வந்துவிட்டது. ‘இந்த மாதிரிப் பெயரை நான் கேட்டதே இல்லையே! மான், மாடு என்று இவ்வாறு பல மிருகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கடக்கிட்டி முடக்கிட்டி என்று கேள்விப்பட்டதே இல்லையே! இருந்தாலும் நன்கு விசாரிப்போம்’ என்று புலி தனக்குள் தீர்மானம் செய்தது.

“உனக்கு அண்ணன் தம்பிகள் உண்டா?”

இரண்டு பேர் அண்ணன் உண்டு. மூத்தவன் ‘சடக்கிட்டி முடக்கிட்டி’ ; இரண்டாவது அண்ணன் பெயர் மடக்கிட்டி முடக்கிட்டி'. எனக்குத் தம்பி இல்லை" என்று கடக்கிட்டி முடக்கிட்டி பதில் சொல்லிற்று.