பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh||98}

லோமியோ கொண்டு வந்திருந்த கப்பல்களைக் கைப்பற்றி ஓட்டிக்கொண்டு ஸ்பெயினுக்குப் போய் விட்டான். இவ்வாறு கப்பல்களைக் கைப்பற்றிக்கொண்டு, அவற்றில் அப்பாவிக் குடிமக்களிடமிருந்து அரட்டிப் பறித்த தங்கத்தையும் பிற பொருள்களையும் ஏற்றிச் சென்று ஸ்பெயினில் திருட்டுத்தனமாக இறக்கிக் கொண்டதோடு நில்லாமல் கொலம்பஸ் மீது பழி தூற்றிக்கொண்டு வேறு திரிந்தார்கள் அந்தக் குழப்பக்காரர்கள்.

கொலம்பஸ் நோயுடன் இசபெல்லாவுக்கு வந்த இரண்டாவது மாதத்தில் டோரிஸ் என்பவன் குடியேற்றவாதிகளுக்குத் தேவையான பொருள்களை நான்கு கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வந்தான். அரசரும் அரசியும் அவன் மூலம் அனுப்பியிருந்த கடிதத்தில், போர்ச்சுக்கலுடன் ஏற்பட்டிருந்த ஓர் அரசியல் விவகாரத்தில் உதவுவதற்காக வருமாறு கொலம்பசை அழைத்திருந்தார்கள். ஆனால், உடல் நிலை காரணமாக கொலம்பஸ் அப்போது போக முடியவில்லை. டோரிஸ் திரும்பும் போது, அவனுடைய கப்பல்களில் தங்கம் ஏற்றி அனுப்ப வேண்டியிருந்தது. அரசாங்கத்துக்கு அனுப்ப வேண்டிய அளவு தங்கம் சேரவில்லை. அதற்காக, அவன் கொடுமைக்காரனான மார்கரிட் வழியைப் பின்பற்றி இந்தியர்களிடம் கட்டாய வசூல் செய்யலானான். மறுத்துரைத்தவர்களை அடிமைகளாகப் பிடித்தான்; பெருமுரடர்களாயிருந்தவர்களுக்குக் கொலைத்தண்டனை விதித்தான்.

இவ்வாறு பிடிபட்ட அடிமைகள் ஆயிரத்தைந்நூறு பேர் சேர்ந்திருந்தார்கள். டோரிஸ் தன் நான்கு கப்பல்களிலும் ஐநூறு பேரை ஏற்றிக் கொண்டான். மீதியிருந்தவர்களை, இசபெல்லாவில் இருந்த ஸ்பானியர் ஒவ்வொரு வரும் தங்களுக்கு எத்தனை அடிமைகள் தேவையோ அத்தனை பேரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றான்.