பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

கடைசியாக அரசரிடமிருந்தும் அரசியிடமிருந்தும் ஓர் அழைப்பு வந்தது. அந்த அழைப்பைத்தான் கொலம்பஸ் எதிர்பார்த்துக் காத்திருந்தான். இயல்பாகவே எளிய வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட கொலம்பஸ், ஸ்பானியர்களிடம் செல்வாக்குப் பெற ஆடம்பரம் தேவையென்று நன்றாக உணர்ந்திருந்தான். ஆகவே, அரசாங்க அழைப்பு வந்தவுடன், கவர்ச்சி மிகுந்த ஆடம்பரத்தோடு ஊர்வலமாகச் செல்ல ஏற்பாடுகள் செய்தான்.

கொலம்பசின் இரு புறத்திலும், டாயினோ இனத் தலைவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிவப்பு இந்தியர்கள் மட்டக் குதிரைகளில் ஏறிச் சென்றார்கள். வேலைக்காரர்கள் பல அழகிய வர்ணங்களைக் கொண்ட கிளிகள் அடங்கிய கூடுகளுடன் முன்னே சென்றனர். அந்தக் கிளிகள் கீச் கீச் சென்று கத்தி எழுப்பிய பேரொலியே அந்த ஊர்வலத்திற்குரிய பெரிய மங்கல வாத்தியம் போல் இருந்தது. அந்தச் சத்தம் கேட்டுத் தெருவுக்கு ஓடி வந்த மக்கள், இந்த வினோத ஊர்வலத்தைக் கண்டு அதிசயித்து நின்றார்கள்.

காட்டுப் பாதைகளில் ஊர்வலக் குழு செல்லும் போது, பேசாமல் போவார்கள். வழியில் உள்ள ஊருக்குள் நுழையு முன்னால், இந்தியர்கள் இருவருக்கும், இறக்கைகளாலாகிய பெரிய ராஜ முடியைத் தலையில் அணிவிப்பார்கள். அவர்கள் தங்கள் பரம்பரை வழக்கப்படி அணியும் தங்க ஆபரணங்களைக் கட்டி விடுவார்கள். பார்ப்பவர்கள், "ஆகா! தங்க வளம் நிறைந்த புதியதொரு நாட்டைக் கண்டு பிடித்த கொலம்பஸ் வருகிறார்!" என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த ஏற்பாடு!

வல்லா டோனிட் என்ற ஊரில் அரசரையும் அரசியையும் சந்தித்தான் கொலம்பஸ். அரசிக்குப் பணிபுரியும்